லதா மங்கேஷ்கர், மோடி
லதா மங்கேஷ்கர், மோடி (பழைய படம்)
சினிமா

இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் லதா மங்கேஷ்கர்: பிரதமர்

காமதேனு

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் (92). இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இவர், இந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளைப் பெற்றுள்ளார்.

கரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நிலை நேற்று மோசமானது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தும் இன்று காலை மரணமடைந்தார்.

அவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: “சகோதரி லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தியவை. பல வருடங்களாக இந்திய சினிமாவின் மாற்றங்களுக்கு நெருக்கமான சாட்சியமாக இருந்தார். திரைப்படங்களுக்கு அப்பால், அவர் இந்தியாவின் வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் காண விரும்பியவர் அவர்.

அவர், என்மீது கொண்டிருந்த அளவற்ற பாசத்துக்காக நான் பெருமை கொள்கிறேன். அவருடனான எனது நினைவுகள் மறக்க முடியாததாக இருக்கும். அவர் மறைவால் வாடும் சக இந்தியர்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். அவர் குடும்பத்தினரிடம் பேசி என் இரங்கலைத் தெரிவித்தேன். ஓம் சாந்தி”. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT