சினிமா

லதா மங்கேஷ்கருக்குக் கரோனா தொற்று: ஐசியூ-வில் அனுமதி

காமதேனு

பிரபலப் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கரோனா தொற்று காரணமாக, மும்பை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தித் திரையுலகில் பல சினிமா பிரபலங்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்திய சினிமாவின் மூத்த பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 92 வயதான லதா மங்கேஷ்கருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தி, தமிழ், உட்பட பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார் லதா மங்கேஷ்கர்.

தமிழில் இளையராஜா இசையில், ’ஆனந்த்’ படத்தில் ’ஆராரோ ஆராரோ’, கமலின் ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றுள்ள ’வளையோசை...’ உட்பட சில பாடல்களைப் பாடியுள்ளார். பலமுறை தேசிய விருதுகளை பெற்றுள்ள இவர், மிக உயரிய விருதான பாரத ரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லதா மங்கேஷ்கர், விரைவில் நலம் பெற்றுத் திரும்ப திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT