சினிமா

வில் ஸ்மித்தை 'லாக்கப்' நிகழ்ச்சிக்கு வரவேற்ற கங்கனா!

ஆதிரா

நேற்று முன்தினம் 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள், கலைஞர்களைத் தாண்டிய பேசுபொருளாக நடிகர்கள் வில் ஸ்மித்தும் கிறிஸ் ராக்கும் இருந்தார்கள்.

'கிங் ரிச்சர்ட்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் பெற்றார். அப்போது, விழா மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜேடாவின் தலைமுடியைக் கேலி செய்யும் விதமாகப் பேசினார். Alopecia என்ற நோயினால் ஜேடா பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்குக் கடுமையான முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. இது ஹாலிவுட்டில் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும்போது அவரது உடல்நிலையை பொது மேடையில் கேலி செய்யும்போது பொறுத்துக்கொள்ள முடியாது என மேடையிலேயே கிறிஸ்ஸை வில் ஸ்மித் ஓங்கி அறைந்தார். கிறிஸ்ஸின் இந்த உடல் கேலி நகைச்சுவையை ஜேடாவுமே ரசிக்கவில்லை.

இந்தச் சம்பவமும் இணையத்தில் பேசு பொருளானது. இதையடுத்து, “அன்பு விநோதமான செயல்களைச் செய்யவைக்கும் ('Love will make you So Crazy Things). உணர்ச்சி வேகத்தில் அப்படிச் செய்துவிட்டேன். அன்பும் கருணையும் நிறைந்த இந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை” வில் ஸ்மித் மன்னிப்பு அறிக்கை ஒன்றையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இதுபோன்ற வன்முறைகளை ஆஸ்கர் மேடையும் அனுமதிக்காது எனவும் இது குறித்து விசாரிக்கப்படும் எனவும் ஆஸ்கர் தரப்பும் கருத்து தெரிவித்திருந்தது.

விஸ் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக்கின் செயல்கள் குறித்து ரசிகர்கள் முதல் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல பிரபலங்களும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை கங்கனாவும் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என் தாய் அல்லது தங்கை இதுபோன்று உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும்போது எந்த முட்டாளாவது இப்படி கேலி செய்தால் வில் ஸ்மித் செய்ததைப் போல நானும் அறைந்திருப்பேன். அவரது செயலுக்கு பாராட்டுகள். நிச்சயம் அவர் எனது 'லாக்கப்' நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்க்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அல்ட் பாலாஜி ஓடிடி தளத்தில் கங்கனா தொகுத்து வழங்கும் ‘லாக்கப்' என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகிறது. கிட்டத்தட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியைப் போன்றே பிரபலங்கள் லாக்கப்புக்குள் அடைக்கப்பட்டு அவர்களுக்கான டாஸ்க் இதில் கொடுக்கப்படும். பிரபலங்களின் மன வலிமை மற்றும் உடல் வலிமையை சோதிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT