சினிமா

நடிகை கடத்தல் வழக்கு: விசாரணைக்கு ஆஜரானார் திலீப்

காமதேனு

விசாரணை அதிகாரியைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், குற்றப்பிரிவு விசாரணைக்கு இன்று ஆஜரானார்.

பிரபல மலையாள நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விழக்கில் மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டது என்றும் அதை அவர் பார்த்தது தனக்குத் தெரியும் என்றும் கூறியிருந்தார். இதை அடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியைக் கொல்ல, நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்தார். இதையடுத்து திலீப், அவர் சகோதரர் அனூப், திலீப்பின் மைத்துனர் டி.என்.சூரஜ், உறவினர் அப்பு, நண்பர் பைஜூ செம்மங்காடு, ஓட்டல் உரிமையாளர் சரத் ஆகிய 6 பேர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மூன்று முறை ஒத்திவைத்த கேரள உயர் நீதிமன்றம் நேற்று விசாரித்தது.

அப்போது திலீப் உட்பட 6 பேரும் ஜனவரி 23 (இன்று), 24 மற்றும் 25-ம் தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் 27-ம் தேதி வரை திலீப்பைக் கைது செய்ய, நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது என்றும் நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையை வரும் 27-ம் தேதி, சீலிடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நடிகர் திலீப், கமலச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு முன்பே ஆஜரானார். அவரிடம் இரவு 8 மணி வரை விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

SCROLL FOR NEXT