சினிமா

‘நான் ஒன்றும் அவ்வளவு மோசமானவன் இல்லை’: மீ டூ சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர் டென்ஷன்!

காமதேனு

தன்னை மீடியா மிகவும் மோசமாக சித்தரிப்பதாக பிரபல வில்லன் நடிகர் ஆவேசமாகக் கூறினார்.

பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர் தமிழில் 'திமிரு', 'சிலம்பாட்டம்', 'சிறுத்தை', 'மரியான்' உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் ’ஒருத்தி’ என்ற படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், மீ டூ புகார் பற்றி பேசினார். “மீ டூ என்றால் என்னவென்று புரியவில்லை. ஒரு பெண்ணைப் பார்க்கும் போது அவரைப் பிடித்திருந்தால், நேரடியாகச் சென்று உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். விருப்பம் தெரிவித்தால் உறவு வைத்துக் கொள்வேன். இப்படி பத்து பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

அப்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பக்கம் கையை நீட்டியும் பேசியிருந்தார்.

நடிகர் விநாயகனின் இந்தக் கருத்து சர்ச்சையானது. பல்வேறு தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. பின்னர் தன் கருத்துக்கு அவர் மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில், அவர் நடித்துள்ள ’அடிதட்டு’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கொச்சியில் இன்று நடந்தது. அதில் பேசிய அவரிடம் மீண்டும் மீ டூ விவகாரம் கிளப்பப்பட்டது. இதனால் கடுப்பான விநாயகன் ஆவேசமடைந்தார்.

அவர் கூறும்போது," மீ டூ என்பது ஒரு பெண்ணை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்துவது. இதுபோன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு எத்தனை பேர் சிறை சென்றுள்ளனர்? நான் அப்படி யாரையும் துன்புறுத்தவில்லை. நான் அவ்வளவு தாழ்ந்தவனும் இல்லை. ஊடகங்கள் என்னை மோசமாகச் சித்தரிக்கின்றன. செய்யாத விஷயங்களுக்காக என் மீது குற்றம் சாட்டுகின்றன" என்று கோபமாகக் கூறினார்.

SCROLL FOR NEXT