சினிமா

'என் தந்தைக்கு சமமானவர் கருணாநிதி’; இளையராஜா சொன்னதன் காரணம் இதுதான்!

காமதேனு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘என் தந்தைக்குச் சமமானவர் கருணாநிதி’ என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கோவையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இசை நிகழ்ச்சியின் இடையே பேசிய இளையராஜா, “கலைஞர் கருணாநிதி வழியில் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருக்கிறார். அவர் கலைஞரின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பார் என நான் முழுமனதுடன் நம்புகிறேன். கருணாநிதி என் தந்தைக்குச் சமமானவர். எனக்கு இசைஞானி எனப் பெயர் சூட்டியதே அவர்தான். என் தந்தை எனக்கு ஞானதேசிகன் என வைத்த பெயரில் இசையைப் புகுத்தியவர் கருணாநிதி. கருணாநிதி பாதையில் ஸ்டாலின் செய்து வரும் பணிகளை எனக்குச் செய்வதாக நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் மூலம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜா, மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு, மோடியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் எனப் பாராட்டி இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது. நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யமாட்டேன் என அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி தந்தைக்கு ஒப்பானவர் என இளையராஜா பேசி இருப்பது அவர் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

SCROLL FOR NEXT