பவானி ஸ்ரீ
பவானி ஸ்ரீ 
சினிமா

விடுதலையில் கிளிசரின் இல்லாமலேயே அழுதேன்!

ஆர்.சி.ஜெயந்தன்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் பவானி ஸ்ரீ. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷின் தங்கை. வெற்றிமாறனின் தேர்வாக மாறியது முதல், படப்பிடிப்பில் சந்தித்த இடர்பாடுகள், அண்ணனுடைய வழிகாட்டல் வரை அனைத்தையும் காமதேனுவுக்கான இந்தப் பிரத்யேகப் பேட்டியில் நம்முடன் பகிர்ந்திருக்கிறார். இனி பாவானி ஸ்ரீ...

ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்திலிருந்து இசையமைப்பாளர்கள் வருவது ஆச்சரியமல்ல... ஆனால், அண்ணனைத் தொடர்ந்து நீங்களும் நடிக்க வந்தது இயல்பாக நடந்த ஒன்றா?

சிறு வயது முதலே சினிமா பற்றிய பேச்சுத்தான் வீட்டில் அதிகமாக இருக்கும். சினிமாவைப் பற்றியே கேட்டு வளர்ந்ததால், சினிமா அல்லது மீடியாவில் ஏதாவதொரு துறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது சரியாக இருக்கும் என்று நினைத்தேன். செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளியில் படித்தபோது போட்டோகிராபியில் ஆர்வம் வந்தது. அதனால் போட்டோகிராபியைத் தனியாகக் கற்றுக்கொண்டேன்.

ப்ளஸ் 2 முடித்ததும் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் விஸ்காம் படித்தேன். அப்போது ஃபிலிம் மேக்கிங் மீது ஆசை தாவியது. படித்துக்கொண்டே உதவி இயக்குநராகவும் பணி புரிந்தேன். இரண்டு குறும்படங்களையும் இயக்கினேன். இந்த இடத்தில், இயக்கம் என்பதிலிருந்து என்னை நடிப்புக்குள் இழுத்துவிட்டவர்கள் என் சக கல்லூரித் தோழமைகள். அவர்கள் படிப்புக்காக எடுத்த குறும்படங்களில் நடிக்க ஆள் கிடைக்காதபோது என்னை நடிக்க வைத்தார்கள். அப்படித்தான் நடிப்பின் மீது ஆர்வம் வந்தது.

ஏற்கெனவே வீட்டில் ஒரு நடிகர் இருக்கும்போது இன்னொருவர் எதற்கு என்கிற கேள்வி இருந்ததா?

அண்ணன் நடிக்கிறேன் என்று சொன்னபோதே வீட்டில் யோசித்தார்கள்தான். அப்படித்தான் எனக்கும் யோசித்தார்கள். நடிப்பதில் நான் எவ்வளவு ஃபேஷனேட்டாக இருக்கிறேன் என்பதைப் பார்த்து ஏற்றுக்கொண்டார்கள்.

விடுதலை படப்பிடிப்பில் வெற்றிமாறனுடன்...

நீங்கள் விரும்பியிருந்தால், உங்களைக் கதாநாயகியாகப் போட்டு உங்கள் அண்ணனே ஒரு படத்தைத் தயாரித்திருப்பார். ஆனால், ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் வரும் ‘தங்கம்’ கதையில் சாய்ரா, ‘க/பெ.ரணசிங்கம்’ படத்தில் மாயி என சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வர வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

தேடல்தான் காரணம். நீங்கள் சொல்வதைப்போல் செய்வதற்கு அண்ணனிடம் பணம் காய்க்கும் மரம் கிடையாதே. எல்லோரும் கஷ்டப்பட்டுத்தானே பணம் சம்பாதிக்கிறார்கள். இன்னொன்று, வலிந்து செய்யும் எதுவும் சரியாக இருக்காது. நான் நடிக்கத் தொடங்கி 5 வருடங்கள் ஆகிவிட்டது என்பதையே பலரும் நம்ப மறுக்கிறார்கள். நல்ல கதைகள், நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்க தேடலும் காத்திருப்பதும் அவசியம் என்று நினைக்கிறேன்.

உதவி இயக்குநராகப் பணி புரிந்தேன் என்றீர்களே... யாரிடம்?

ஏ.எல். விஜய் சாரிடம் ‘இது என்ன மாயம்?’ படத்திலும் ப்ரியதர்ஷன் சாரிடம் ‘சில சமயங்களில்’ படத்திலும் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன்.

வெற்றிமாறனின் தேர்வாக எப்படி மாறினீர்கள்?

ஒரு நாள் வெற்றிமாறன் சாரிடமிருந்து போன் “ஒரு சின்ன ரோல் இருக்கு... பண்ண விருப்பம் இருக்கா?” என்றார். நான் ஆடிப் போய்விட்டேன். எவ்வளவு முக்கியமான இயக்குநர்! சின்ன கேரக்டர்களைக் கூட எவ்வளவு ஸ்ட்ராங்காக எழுதிவிடுவார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருடைய அலுவலகத்தில் இருந்தேன்.

விடுதலை படத்தில்...

கதைக் களம் பற்றி மட்டும் சொன்னார். “உங்க கேரக்டர் பற்றி இப்போ சொல்ல மாட்டேன். நீங்கள் ஸ்பாட்டுக்கு வாங்க... எந்தத் தயாரிப்பும் இல்லாம வரணும். அப்பத்தான் சரியாக இருக்கும்” என்றார். அதன்பிறகு ஸ்பாட்டில் அவர் காட்சியையும் அதில் என்னிடம் எதிர்பார்ப்பதையும் விளக்கிச் சொல்லும்போதே நாம் எப்படி அந்தக் காட்சியில் பேசணும் நடக்கணும் என்று தெரிந்துவிடும். மறந்தும் நடித்துவிட மட்டும் கூடாது.

தமிழரசி கதாபாத்திரம் பற்றிய புரிதலை இயக்குநர் வெற்றிமாறன் உங்களிடம் எவ்வாறு ஏற்படுத்தினார்?

முதலில் இயற்கை, இயற்கை வளங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லிவிட்டு, மலைவாழ் மக்களின் வாழ்க்கை குறித்து நிறைய எடுத்துச் சொன்னார். அவர்கள் பட்ட பல துன்ப, துயரங்கள், இப்போதும் கூட்ட எவ்வளவு கஷ்டங்களைச் சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார். அப்படிப்பட்ட ஒரு மலைவாழ் பெண்ணாக இருந்தாலும் தமிழரசி என்பவள் இயலாமை, மன வலிமை இரண்டுமே உள்ள ஒரு கதாபாத்திரம் என்பதை எனக்குச் சொன்னார்.

போலீஸ் இந்த அளவுக்கு டார்ச்சர் செய்திருக்கிறார்களா என்று சித்திரவதைக் காட்சிகளில் நடித்தபோது எனக்கு மன அழுத்தம் உருவாகிற அளவுக்கு எண்ணினேன். கிளிசரின் தேவைப்படாமலேயே அழுதேன்.

மலை, காடு என்று படப்பிடிப்பு நடந்தபோது எப்படியிருந்தது அனுபவம்?

படப்பிடிப்புத் தளத்தில் நிறைய பாம்புகளைப் பார்த்தோம். விலங்குகளும்தான். நேரடியாகப் பாதிக்கப்பட்டது என்றால் அட்டை மற்றும் உண்ணிகள் கடிதான் பெரிய சவால். ஒரே இடத்தில் நின்று நடிக்கிற ஷாட் என்றால், ஷாட் முடிவதற்குள் 10 அட்டைகள் என்னைக் கடித்து ரத்தத்தை உரிஞ்சிக்கொண்டிருக்கும். அதன்பின் அதன் மீது உப்புக் கரைத்த தண்ணீரை ஊற்றி கீழே தள்ளுவோம். இதைவிட பயங்கரம் உண்ணிகள். எப்போது உடலில் ஏறியது, எப்போது கடித்தது என்றே தெரியாது. அவை கடித்த அலர்ஜியால் கண்டு கண்டாக தடித்துப் போய்விடும். உண்ணிகள் கடித்து அலர்ஜி வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

அண்ணன் ஜிவிபி, மாமா ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள். நீங்கள் இளையராஜாவின் இசையில் ‘காட்டு மல்லி’யாக நடித்துவிட்டு வந்திருக்கிறீர்கள்..?

மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன். அவரை நேரில் சந்தித்தபோது “நீ பாடுவியா?” என்று கேட்டார். “இல்லை” என்று ஏக்கத்துடன் தலையசைத்துவிட்டு வந்தேன்.

SCROLL FOR NEXT