சினிமா

'ராக்கெட்ரி' கிளைமாக்ஸ் காட்சிகளில் அழுது விட்டேன்: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

ஆதிரா

'ராக்கெட்ரி' படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் நிஜமாகவே அ து விட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகி இருக்க கூடிய திரைப்படம் 'ராக்கெட்ரி'. ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படம் இது. அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டு அவர் அதை எதிர்கொண்டது மீண்டது தான் கதையின் கரு. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் நேர்காணலில் விவரிக்கும் படி கதை நடக்கும்.

இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது பற்றி, நேற்று மாலை இன்ஸ்டாகிராம் லைவ்வில் நடிகர் மாதவனுடன் சூர்யா கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில்,” ‘ராக்கெட்ரி’ படத்தில் நான் நடிப்பதற்கு முதலில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மாதவனுக்கு நன்றி. நம்பி நாராயணனின் வாழ்க்கைக் கதையைக் கேட்ட பின்பு, அதில் சம்பளம் வாங்காமல் அவருக்காக நடித்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதுதான் அவருக்கு நான் செய்யும் மரியாதை. குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் எல்லாம் எனக்கு நிஜமாகவே அழுகை வந்து விட்டது.

க்ளைமாக்ஸ் காட்சியில் மாதவனுக்கு பதிலாக நிஜ நம்பி வந்து பேசுவார். நிஜமாகவே அந்த இடத்தில் அப்படி யோசித்தது பற்றி இயக்குநர் மாதவனை நான் வியந்து பார்த்தேன். ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் இயக்கம் என மாறி, மாறி அவர் சமாளித்ததைப் பார்த்து நிஜமாகவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாருக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அவர் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். இதில் நானும் ஒரு அங்கம் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது “ என நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

நடிகர் மாதவனும் சூர்யாவுடன் உரையாடும் போது 'ஜெய்பீம்' படத்தில் நடித்ததற்காகவும், ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT