டாக்டர் ராஜசேகர், ஜீவிதா
டாக்டர் ராஜசேகர், ஜீவிதா 
சினிமா

கரோனாவில் இருந்து மீண்டதற்கு ரசிகர்களே காரணம்: நடிகர் டாக்டர் ராஜசேகர்

காமதேனு

“கரோனாவில் இருந்து நான் மீண்டதற்கு ரசிகர்களின் அன்புதான் காரணம்” என்று நடிகர் டாக்டர் ராஜசேகர் உருக்கமாகத் தெரிவித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், 'ஜோசப்'. இதில், ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், ஆத்மியா உட்பட பலர் நடித்திருந்தனர். எம். பத்மகுமார் இயக்கி இருந்தார். தன்னிடம் இருந்து பிரிந்த தன் முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, அது கொலை என்பதை கண்டுபிடிக்கும் ஓய்வுபெற்றக் காவல் துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்தார். மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் திரைக்கதை அனைவராலும் பாராட்டப்பட்டது.

ராஜசேகர், ஜீவிதா, ஷிவானி

இந்தப் படம் தெலுங்கில் ‘சேகர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடிக்கிறார். அவர் மகள் ஷிவானி ராஜசேகர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜீவிதா ராஜசேகர் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது ராஜசேகர், அவர் மனைவி ஜீவிதா, மகள் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டாக்டர் ராஜசேகர் போராடி மீண்டார்.

’சேகர்’ படத்தில் ராஜசேகர்

இந்நிலையில், அவருக்கு நேற்று (பிப்.4) பிறந்தநாள். இதையடுத்து ’சேகர்’ படத்தின் கின்னேரா என்ற பாடல் வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராஜசேகர், “கரோனாவில் இருந்து நான் மீண்டதற்கு ரசிகர்களின் அன்புதான் காரணம்” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டபோது, அதில் இருந்து மீள்வேனா என்று தெரியவில்லை. எழுந்துகொள்ளவோ, நடக்கவோ முடியாத நிலையில் மருத்துவமனையில் இருந்தேன். ஆனால் இன்று உங்கள் முன் நிற்பதற்கு என் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் ஆசிர்வாதம்தான் காரணம். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகள்” என்றார்.

இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT