சினிமா

‘படைப்புச் சுதந்திரத்துக்குள் அரசு தலையிடக் கூடாது’ - கறார் காட்டும் கமல்!

காமதேனு

2018-ல் வெளியான ’விஸ்வரூபம் 2’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தியத் திரைப்படங்கள் குறித்த தனது கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறார்.

“நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வந்திருக்கிறேன். இது நீண்ட இடைவெளிதான். நான் திரும்பி வந்துவிட்டேன். என் படத்தைப் பார்க்கப் பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வடக்கு, தெற்கு என்று சினிமாவைப் பிரித்துப் பேசுவது பற்றி கேட்கிறார்கள்.

நான் எப்போதும் என்னை இந்தியனாகவே பார்க்கிறேன். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நான் வசதியாக இருக்க முடியும். அதுதான் இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டின் அழகு. வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் அபாரத் திறமைகளை அறிவேன். அதனால் அதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும், “நாம் தொடர்ந்து இந்தியா முழுவதுமிருந்து படங்களை உருவாக்கினால் அதை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்ல முடியும். இந்திய திரைப்படங்கள் சர்வதேசப் படங்களாக மாற நீண்ட காலமாகிவிட்டது. சினிமாவை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டியது திரையுலகினர் பணி. அரசு அதில் தலையிட வேண்டாம். படைப்புச் சுதந்திரத்துக்குள் அதிகம் தலையிடக் கூடாது. உலக அளவில் பேசக்கூடிய திரைப்படங்கள் எடுக்க வேண்டும். அது இப்போது நடக்கிறது” என்றும் கமல் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT