சினிமா

`இதயத்தை தொடும் நேர்மையான கதை’: கவுதம் கார்த்திக் படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ்

காமதேனு

’1947 ஆகஸ்ட் 16’ படம் இதயத்தை தொடும் நேர்மையான கதையை கொண்டது என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ், பர்பிள் புல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம், ’1947 ஆகஸ்ட் 16’. இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரேவதி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். புகழ், மதுசூதன் ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பொன்குமார் இயக்குகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, ஒரு கிராமத்தைச் சேர்ந்த வீரன், பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்லும் படம் இது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் இப்போது நடந்து வருகின்றன.

இயக்குநர் என்.எஸ். பொன்குமார் கூறும்போது, ‘’இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர்தான் நாயகன். உணர்வுபூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, ’’இது இதயத்தை தொடும் நேர்மையான கதை. அற்புதமான படைப்பு, இந்த கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கதையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் உங்கள் மனதில் நிலைத்து இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT