சினிமா

`சினிமா நல்லா இருக்கா, இல்லையான்னே புரியலை’: கே.பாக்யராஜ் பேச்சு

காமதேனு

``சினிமா நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று புரியவில்லை'' என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

கணேஷ் சந்திரசேகர் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'செஞ்சி'. ஹரிஸ் ஷிண்டே ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை முத்து- கணேஷ் . இந்தப் படத்தின் பாடல்கள் சென்னையில் வெளியிடப்பட்டது. இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன், ரஷ்ய நடிகை கெசன்யா உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும்போது, ``இப்போதெல்லாம் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது. வெற்றிகரமான மூன்றாவது நாள், வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போடுகிறார்கள். ஒரு காலத்தில் வெற்றிகரமான 25-வது நாள், 100-வது நாள் ,125-வது நாள், 175-வது நாள் என்று விளம்பரம் செய்வார்கள். இப்போது படம் வெளிவருவதே பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது. இந்த நிலையில் சினிமா நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று ஒன்றும் புரியவில்லை.

அதே நேரம், தமிழ் சினிமா உலகின் பல நாடுகளில் ஜப்பான், கொரியா என்றெல்லாம் போய் வெளியாகிப் பேசப்படுகிறது. அங்கு இப்போது தமிழ் சினிமா என்று பேசுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி. அப்படிப்பட்ட சூழலில்தான், கணேஷ் சந்திரசேகர் இந்த ’செஞ்சி’ படத்தை உருவாக்கி இருக்கிறார் .

தமிழ் சினிமாவில் பெரிய ஆள், சின்ன ஆள் என்று யாரும் பார்ப்பதில்லை. படம் நன்றாக இருந்தால் வரவேற்பார்கள். புதிய முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள்'' என்றார்.

விழாவில், ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஷிண்டே, இசை அமைப்பாளர்கள் முத்து- கணேஷ் , பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத் தலைவர் வைத்தியநாதன், டத்தோ டாக்டர் கமலநாதன் உட்பட பலர் பேசினர்.

SCROLL FOR NEXT