Everything Everywhere All at Once
Everything Everywhere All at Once 
சினிமா

11 பிரிவுகளில் ஆஸ்கர் விருது மேடையை முற்றுகையிடும் திரைப்படம்!

காமதேனு

‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான 11 பிரிவுகளின் கீழான பரிந்துரைகளுடன் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

95வது அகடெமி அவார்ட்ஸ் எனப்படும் ஆஸ்கர் விருதுக்கான இறுதி அறிவிப்பு நெருங்கி வருவதால் சர்வதேச அளவிலான திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையின் இறுதிப்பட்டியலில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உட்பட 11 பிரிவுகளின் கீழ் ‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் இடம்பிடித்துள்ளது. சிறந்த திரைப்படத்துக்கான போட்டியில் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுடன் இது மோதுகிறது.

’டேனியல்ஸ்’ என்ற பெயரில் விளிக்கப்படும் டேனியல் குவான் மற்றும் டேனியல் செய்னர்ட் இரட்டை இயக்குநர்கள், ஜாக்கி சானை மனதில் வைத்து ‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைக்கதையை முதலில் உருவாக்கி இருந்தனர். ஜாக்கி சான் நடிக்காது போகவே, நடிகை மிஷெல் யோ-க்காக சில மாற்றங்களுடன் திரைக்கதையை உருவாக்கினார்கள். ஆனபோதும் ஜாக்கி சானுக்கான காமெடி இழையை நீக்கவில்லை. அந்த குறை தெரியாது மிஷெல் இந்த திரைப்படத்தில் அசத்தி இருக்கிறார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் பரிந்துரையிலும் மிஷெல் இடம்பிடித்துள்ளார்.

காமெடி டிராமா வகைமையில் கடந்தாண்டு வெளியான இந்த திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதுடன், விமர்சகர்கள் கொண்டாடியதில் விருதுகளையும் குவித்து வருகிறது. 80வது கோல்டன் க்ளோப் விருதுக்கு 6 பிரிவுகள், 76வது பிரிட்டீஷ் அகடெமி விருதுக்கு 10 பிரிவுகள் உட்பட பல்வேறு விருது மேடைகளுக்கு ‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் சுனிதா மணி என்ற அமெரிக்க நடிகையின் பெற்றோர் தமிழர்கள் என்பது கொசுறுத் தகவல்.

SCROLL FOR NEXT