சினிமா

`குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் எல்லோரும் தண்டிக்கப்படணுமா?'- பிரபல நடிகர் கேள்வி

காமதேனு

குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால், மொத்த குடும்பத்தினரும் தண்டிக்கப்பட வேண்டுமா? என்று பிரபல நடிகர் கேள்வி எழுப்பினார்.

52-வது கேரள திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது விவரங்களை கேரள கலாச்சார அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார். 'மதுரம்', 'நாயட்டு', ‘ப்ரீடம் பைட்’ படங்களில் சிறப்பாக நடித்ததற்காக ஜோஜூ ஜார்ஜுக்கும் 'ஆர்க்கரியாம்' படத்தில் முதியவராக நடித்தத பிஜு மேனனுக்கும் இணைந்து சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. ’பூதகாலம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த நடிகை விருது நடிகை ரேவதிக்கு கிடைத்துள்ளது. சிறந்த திரைப்படமாக கிருஷாந்த் இயக்கிய ’ஆகாச வியூகம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலையாள நடிகர் இந்திரன்ஸ் நடித்த ’ஹோம்’ படத்துக்கு விருது கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ’ஹோம்’ படத்தை, பாலியல் வன்கொடுமை புகாரில் தலைமறைவாக உள்ள விஜய் பாபு தயாரித்துள்ளார். இந்திரன், ஸ்ரீநாத் பாஷி, மஞ்சு பிள்ளை உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை ரோஜின் தாமஸ் இயக்கி இருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்கு விருது கிடைக்காதது பற்றி நடிகர் இந்திரன்ஸ் கூறுகையில், ``நடுவர்கள் ’ஹோம்’ படத்தைப் பார்த்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்கான வாய்ப்பை, அவர்களுக்கு யாரும் கொடுத்திருக்கமாட்டார்கள். குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால், மொத்தக் குடும்பமும் தண்டிக்கப்பட வேண்டுமா? அவருக்கு (விஜய் பாபு) எதிராக புகார் மட்டுமே எழுந்துள்ளது. எந்த தீர்ப்பும் வெளியாகவில்லை. விசாரணைக்குப் பின் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டால், நடுவர்கள் மீண்டும் அழைத்து விருதை சரி செய்வார்களா?

எனக்கு விருது கிடைக்காததில் எந்த வருத்தமும் இல்லை. விருது பெற்றவர்கள் அனைவரும் எனக்கு பிடித்தவர்கள். நான் அவர்களின் ரசிகன். ’ஹோம்’ படத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். எல்லோரும் அந்தப் படம் பற்றி சொன்னார்கள். மக்களிடம் இருந்து பெறும் ஆதரவுதான் ஒரு படத்துக்கு கிடைக்கும் உண்மையான ஆதரவு. அந்த ஆதவு கிடைத்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்`` என்றார்.

இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT