சினிமா

`மசாலா, பம்மாத்துப் படங்களுக்கு நடுவே...’: `மாமனிதன்' படத்தைப் பாராட்டிய மிஷ்கின்!

காமதேனு

விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தை இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இதில் காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி சென், அனிகா, மானஸ்வி கொட்டாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். படத்தை ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். ஸ்டூடியோ 9 நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பாரதிராஜா பாராட்டியிருந்தார். இப்போது இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. `மாமனிதன்' என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது. அவன் `மாமனிதன்' ஆகிறான்.

மிக எளிமையாக எடுக்கப்பட்ட அன்பு சித்திரம். இந்தப் படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது. மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தைத் தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்'' என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT