சினிமா

'என் படத்தை விமர்சிப்பவர்களைத் தற்குறிகள் என்றேனா?': இயக்குநர் மிஷ்கின் விளக்கம்

காமதேனு

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய படத்தை விமர்சிப்பவர்களை தற்குறிகள் என சொன்னதாக வெளியான செய்திக்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

’சித்திரம் பேசுதடி’ படம் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். அதற்கு முன்பு ’யூத்’, ‘காதல் வைரஸ்’, ‘ஜித்தன்’ ஆகிய படங்களில் நடித்தார். இப்போதும் நடிப்பை கைவிடாமல் நடித்து வருகிறார். கடைசியாக அவர் ‘பேச்சுலர்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவரது இயக்கத்தில் ‘பிசாசு2’ விரைவில் வெளியாக உள்ளது. நேற்று படத்தின் இரண்டாம் பாடல் வெளியான நிலையில், இந்த மாதம் இறுதியில் வெளியாக இருந்த படத்தின் வெளியீடு பெரிய படங்கள் வெளியீடு காரணமாக செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றின் தலைப்பாக அவரது படத்தை விமர்சிப்பவர்களை தற்குறிகள் என குறிப்பிட்டதாக வைக்கப்பட்டு இருந்தது. அது சர்ச்சைகளைக் கிளப்பவே தலைப்பு குறித்தும் இயக்குநர் மிஷ்கின் விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, "என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்புச் சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள். நான் அந்த அர்த்தத்தில் அதை சொல்லவில்லை. நான் சொன்னது வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.

என் படத்தைப் பாருங்கள், படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள். இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன். விமர்சிப்பது அனைவரின் உரிமை. ஆனால், உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்" என கூறியுள்ளார் மிஷ்கின்.

SCROLL FOR NEXT