திவ்யதர்ஷினி
திவ்யதர்ஷினி 
சினிமா

‘மணிக்கணக்கில் நிற்பவர்களின் வலி’ -மனம் திறந்த திவ்யதர்ஷினிக்கு குவியும் பாராட்டு!

காமதேனு

வழக்கமாக மேடையில் இருந்தபடி பார்வையாளர்களை பரவசப்படுத்தும் டிடி, இம்முறை மேடையில் நிற்பவர்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார். இது அவரைப் போன்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மத்தியிலேயும் பரவச வரவேற்பு பெற்று வருகிறது.

’டிடி’ என்று செல்ல சுருக்கத்தோடு அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை முதல் சினிமா வரை ரசிகர்களை வசீகரித்து வருகிறார். கூடவே, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பின்னணிக் குரல் கொடுப்பது போன்றவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

திவ்யதர்ஷினி

தன்னுடைய திறமை சார்ந்து மட்டுமன்றி, மணமுறிவான வாழ்க்கை, ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் உடல்நல பாதிப்பு என தான் கடந்து வந்த சாதனைகளையும் பொதுவெளியில் பகிர்ந்து பெண்களுக்கு உத்வேகமும் தந்து வருகிறார். இதனால், நட்சத்திரம் என்பதைக் காட்டிலும் சக மனுஷியாகவும், தோழமையாகவும் டிடி உடன் ப்ரியம் பாராட்டுவோர் இருக்கின்றனர்.

அண்மையில் தனது உடல்நல பாதிப்பு ஒன்றினை முன்வைத்து, இன்ஸ்டாகிராமில் டிடி வைத்த வேண்டுகோள் ரசிகர்கள் மட்டுமன்றி சக தொகுப்பாளர்கள் மத்தியிலேயும் வரவேற்பு பெற்று வருகிறது. ருமாட்டாய்டு மட்டுமன்றி கால் அறுவை சிகிச்சை காரணமாக, ஊன்றுகோல் உதவியுடனே தற்காலிகமாக நடைபயின்று வருகிறார் டிடி. அந்த வகையில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவினை தொகுத்து வழங்கும் பணியில் ஈடுபட்டார். உடல் உபாதையின் மத்தியிலேயும் வழக்கமான அதே துடிப்போடும், மலர்ச்சியோடும் நிகழ்ச்சியை பொறுப்பேற்று முடித்துக் கொடுத்தார்.

ஆனால், அங்கு தான் எதிர்கொண்ட சவால் ஒன்றினை பிற்பாடு இன்ஸ்டாகிராம் பதிவாக வெளியிட்டார். அதிக நேரம் நிற்க முடியாத காரணத்தினால், டிடிக்கு என பிரத்யேக இருக்கை போடப்பட்டது. பார்வையாளர் மட்டத்திலிருந்து பார்க்கும்போது டிடி வழக்கம்போல, நின்றபடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக தென்பட்டது. ஆனால் அமர்ந்தபடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் டிடி. அந்த அனுபவத்தின் அடிப்படையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றையும் டிடி முன்வைத்திருக்கிறார்.

’வாத்தி’ நிகழ்ச்சியில் டிடி

“இம்மாதிரி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவோர் சுமார் 5 மணி நேரத்துக்கு நின்றபடி தங்களது கடமையாற்ற வேண்டி இருக்கிறது. இது மிகவும் சிரமம் தரக்கூடியது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இம்மாதிரி நாற்காலிகளை வழங்கினால், தொகுப்பாளர்கள் கால்வலி இன்றி உற்சாகமாக பணியாற்ற முடியும்” என்று டிடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

டிடியின் இந்த பதிவுக்கு, சக நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான அர்ச்சனா, கோபிநாத், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலரும் வரவேற்று இதயங்களை பறக்கவிட்டுள்ளனர். அஞ்சனா போன்றவர்கள், மணிக்கணக்கில் நிற்பதால் தங்களுக்கு நேர்ந்த சிரமங்களை பதிவு செய்ததோடு, உண்மையை உரக்கச் சொன்னதற்காக டிடிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். டிடியை பின்தொடரும் ரசிகர்கள் மத்தியிலும், அவரது பதிவு வரவேற்பு பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT