சினிமா

மீ டு-வை இழிவுபடுத்துவதா? - நடிகர் விநாயகன் மீது புகார்

காமதேனு

மீ டு இயக்கத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி, நடிகர் விநாயகன் மீது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘திமிரு’, ‘சிலம்பாட்டம்’, ‘மரியான்’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் விநாயகன். இப்போது நவ்யா நாயருடன் ’ஒருத்தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. விநாயகன் மீது, சில வருடங்களுக்கு முன் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் மீ டூ புகார் கூறியிருந்தார். அது பற்றி, பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த விநாயகன், “மீ டூ என்றால் என்னவென்று புரியவில்லை. ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வதுதான், மீ டூ வா? ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவரை எனக்குப் பிடித்திருந்தால், அந்தப் பெண்ணிடம் நேரடியாகச் சென்று, ‘உறவு கொள்ள விருப்பமா?’ என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் உறவு வைத்துக்கொள்வேன். இப்படி 10 பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

விநாயகனின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். விநாயகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து அந்த பெண் பத்திரிகையாளரிடம் விநாயகன் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், மீ டு இயக்கத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி, விநாயகன் மீது மாநில மகளிர் ஆணையத்தில், ஓபிசி மோர்ச்சா என்ற அமைப்பு புகார் அளித்திருக்கிறது.

SCROLL FOR NEXT