சினிமா

ஏ அல்ல யு/ஏ - எப்படி சாதித்தது ‘கோப்ரா?’

காமதேனு

விக்ரம் நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்துக்கு முதலில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் 7 வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயாகியாக நடிக்கும் இப்படத்தில், இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர் 'ஏ' சான்றிதழ் வழங்கினர். இதனால் தணிக்கை முடிந்ததை அறிவித்த படக்குழு என்ன சான்றிதழ் கிடைத்தது என்பதைச் சொல்லவில்லை.

அதே சமயம் தயாரிப்பு நிறுவனம் யு/ஏ சான்றிதழ் பெற முயற்சித்தது. இருந்த போதிலும் படத்தில் இடம்பெறும் நாயகனின் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டி 'ஏ' சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும் என தணிக்கை குழுவினர் கடிதம் அனுப்பினர். இதையடுத்து கௌதமி தலைமையிலான ரிவைஸில் கமிட்டிக்குப் படத்தை அனுப்பி வைத்தனர். அந்தக் குழு தற்போது கோப்ரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

படத்தில் இடம்பெற்றிருந்த முத்தக் காட்சி நீக்கப்பட்டிருப்பதாகவும், சில இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகள் ‘மியூட்’ செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

SCROLL FOR NEXT