சினிமா

ராகுல் கோலியைப் பலிகொண்ட ரத்தப் புற்றுநோய்!

காமதேனு

95-வது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவின் சார்பாகப் பரிந்துரைக்கப்பட்ட ‘தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ படத்தில் நடித்த ராகுல் கோலி ரத்தப் புற்றுநோய் (லுக்கேமியா) பாதிப்பால் உயிரிழந்தார்.

இயக்குநர் பான் நலின் இயக்கத்தில் உருவான குஜராத்தி திரைப்படமான ‘செல்லோ ஷோ’ (‘தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ’) படத்தில் நடித்தவர் ராகுல் கோலி (10). படத்தின் பணிகள் முடிந்த நிலையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அகமதாபாதில் உள்ள குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். அக்டோபர் 2-ம் தேதி காலை உணவு சாப்பிட்ட பின்னர் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. மூன்று முறை ரத்த வாந்தி எடுத்தார். பின்னர் அவர் உயிரிழந்தார். நேற்று ஜாம்நகர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஹப்பா கிராமத்தில் அவரது குடும்பத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவர் நடித்த ‘தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ திரைப்படம் ஏற்கெனவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு ரசிகர்களிடமும், சினிமா விமர்சகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. சமய் எனும் நாயகன் வேடத்தில் நடித்த பவின் ரபாரியின் நண்பன் மனுவாக நடித்திருந்தார். இந்நிலையில், இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் 14-ம் தேதி திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பே ராகுல் காலமானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

படம் வெளியான பின்னர் தன் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படும் எனும் கனவுடன் இருந்தார் ராகுல். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ராகுலின் இழப்பு அவரது பெற்றோரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது.

ராகுலின் தந்தை ராமு ஒரு ரிக்‌ஷா தொழிலாளி. தனது மகனின் மருத்துவச் செலவுக்காக ரிக்‌ஷாவை அவர் விற்க நேர்ந்தது. தகவல் அறிந்த ‘தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ’, அந்த ரிக்‌ஷாவை மீட்டுக் கொடுத்தது. எனினும், ராகுலை அந்த ஏழைப் பெற்றோரிடம் மீட்டுக் கொடுக்க யாராலும் முடியவில்லை என்பதுதான் சோகம்!

SCROLL FOR NEXT