தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி 
சினிமா

‘சங் பரிவார் குரலை எதிரொலிக்கும் திரைப்படம்’; ‘தி கேரளா ஸ்டோரி’க்கு கேரளாவில் வலுக்கும் எதிர்ப்பு!

காமதேனு

கேரள மாநிலத்துக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்புவதாக, ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிராக கேரளாவில் அதிருப்தி அதிகரித்துள்ளது. கேரளாவில் அந்த திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

’தி கேரளா ஸ்டோரி’ என்ற பன்மொழித் திரைப்படம் மே 5 அன்று இந்தியா நெடுக, திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அந்த திரைப்படத்தை கேரளாவில் வெளியிடக்கூடாது என்றும், திரையிடுவதற்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், சிபிஎம்மின் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் போராடி வருகின்றன.

’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே அதற்கு எதிராக கேரளாவில் கண்டனம் வலுத்து வருகிறது. கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான ’ஐஎஸ்ஐஎஸ்’ஸில் செயல்பட்டு வருவதாக அந்த முன்னோட்டம் விவரித்து இருந்தது. மேலும் கேரளாவின் 32 ஆயிரம் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருப்பதாகவும் அதில் புள்ளிவிவரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. மேலும் லவ் ஜிகாத் என்ற சர்ச்சைக்குரிய தலைப்பிலும் விவாதங்களை முன்னோட்டம் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் சங் பரிவார் அமைப்புகளின் குரலை எதிரொலிக்கும் வகையிலான ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். ’கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கி இருப்பதாகவும், உள்நோக்கத்தோடு கேரள மாநிலம குறித்தும் கேரள மக்கள் குறித்தும் தவறான கருத்துக்களை வழங்கும் திரைப்படத்தை தடை செய்யவும்’ அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே பாஜக ஆதரவு அமைப்புகள், ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வரவேற்றுள்ளன.

SCROLL FOR NEXT