’போர்தொழில்’: திரை விமர்சனம்!
’போர்தொழில்’: திரை விமர்சனம்! 
சினிமா

’போர்தொழில்’: திரை விமர்சனம்!

ச.ஆனந்தப்பிரியா

சீரியல் கில்லர் கொலைகாரனையும் அதற்கான பின்னணியையும் கண்டுபிடிக்கும் அனுபவசாலி அதிகாரியும் களத்திற்கு கத்துக்குட்டி அதிகாரியும் நடத்தும் பரபர சேஸிங் த்ரில்லர் கதைதான் 'போர்தொழில்' படத்தின் ஒன்லைன்.

அகாடமியில் சிறந்தவராக விளங்கும் பிரகாஷ் (அசோக்செல்வன்) போலீஸ் பணியில் சேர்கிறார். அங்கு திறமையும் கண்டிப்பும் மிகுந்த க்ரைம் பிராஞ்ச் மேலதிகாரியாக இருக்கிறார் லோகநாதன் (சரத்குமார்). இவரிடம் அசோக்செல்வனை டிரெயினிங் அனுப்புகிறார்கள். அவரை வேண்டா வெறுப்பாக, திருச்சியில் நடக்கும் தொடர் கொலைகள் தொடர்பான வழக்கை விசாரிக்க அழைத்துச் செல்கிறார் லோகநாதன். பயத்தை மறைத்து பிரகாஷ் தனது புத்தக அறிவை வைத்து லோகநாதனிடம் நல்ல பெயர் வாங்க போராட, அவரைத் தொல்லையாக பார்க்கிறார் அதிகாரி.

இன்னொரு பக்கம் தடயம் இல்லாமல் தொடர்ச்சியாக கொலைகளை கொலைகாரான் செய்து வர, டிபார்ட்மென்ட்டுக்குள் சக அதிகாரிகளின் அரசியல் நெருக்கடிகளும் லோகநாதனுக்குத் தொடர்கிறது. இந்த நிலையில், பிரகாஷின் ஆர்வத்தை புரிந்து கொண்டு மெல்ல மெல்ல அவருக்கு கள பயிற்சியை தருகிறார் லோகநாதன். பெண்களை தொடர்ச்சியாக கொலை செய்யும் அந்த சீரியல் கில்லர் யார்? அவனின் நோக்கம் என்ன? இந்த வழக்கை லோகநாதன்- பிரகாஷ் இணை கண்டுபிடித்ததா என்பதுதான் ‘போர்தொழில்’ படத்தின் கதை.

’போர்தொழில்’: திரை விமர்சனம்!

க்ரைம் திரில்லர் கதைகளுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் எந்த மொழி படங்களுக்கும் உண்டு. படம் தொடங்கியதில் ஆரம்பிக்கும் பரபரப்பு படம் முடியும் வரை தக்க வைப்பது என்பது இது போன்ற படங்களுக்கு மிக முக்கியம். அந்த வகையில், படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை சில இடங்களைத் தவிர படம் முடியும் வரை பரபர திரைக்கதையுடன் இந்தப் படத்தை நகர்த்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா. அதேபோல, நாவல்களில் நாம் இதுநாள் வரை ரசித்த ‘விவேக்-விஷ்ணு’, ‘வசந்த்- கணேஷ்’ கதாபாத்திரங்களை போல சரத்குமார்- அசோக்செல்வன் இணை திரையில் ரசிக்க வைக்கிறது.

’போர்தொழில்’: திரை விமர்சனம்!

வேலை களத்துக்கு பயந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், போலீஸ் கெத்துடன் வேலைக்கு வருவதும், ஒரு கட்டத்தில் இந்த கொலை வழக்கில் ஈடுபாடு காட்டி சரத்குமாரை இம்ப்ரஸ் செய்வதும் என சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அசோக் செல்வன். எல்லோரிடமும் சிடுசிடுவென இருப்பது, தனது அனுபவ அறிவு, சாதுர்யம் மூலம் கொலையாளியை நெருங்குவது, அசோக்செல்வனின் ஆர்வத்தை ரசிப்பது, உணர்ச்சிவசப்படுவது என நடிப்பில் ரகளை செய்திருக்கிறார் சரத்குமார். கதாநாயகி, அவருக்கு இரண்டு பாடல், காதல் டிராக் என வைக்காமல், கதையோட்டத்துடன் பொருந்தும் கதாநாயகியாக நிகிலா விமல். த்ரில்லர் கதைகளுக்கு ஏற்ற பரபர இசையை கொடுத்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய்.

’போர்தொழில்’: திரை விமர்சனம்!

பெண்களை மட்டுமே குறிவைத்து கருணையில்லாமல் நடக்கும் தொடர் கொலைகள், கொலையாளியை சந்தேகித்து நெருங்குவது என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது முதல் பாதி. கொலையாளி இவன் தான் என காவல்துறை நெருங்கி விட்டதாக காட்டிய பிறகும், இரண்டாம் பாதி கதையும் கடைசி பத்து நிமிடங்கள் தவிர்த்து விறுவிறுப்பாகவே நகர்கிறது. சீரியல் கில்லர்களுக்கான கொலை பின்னணியை நியாயப்படுத்தாமல் அதை கையாண்ட விதம் சிறப்பு. ‘பயப்படுகிறவன் கோழை இல்லை; பயந்து ஓடுறவன் தான் கோழை’, ‘வேலையைச் சரியா செஞ்சால் நல்ல பெயர் தானா கிடைக்கும்’ என்பது போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கிறது.

மொத்தத்தில், க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கு நிச்சயம் ‘போர் தொழில்’ திரைப்படம் விருந்து படைக்கும்.

SCROLL FOR NEXT