அஜித் - அரவிந்த் சாமி
அஜித் - அரவிந்த் சாமி 
சினிமா

AK62: அஜித்தின் அடுத்த படத்தில் அரவிந்த் சாமி, சந்தானம்?

காமதேனு

விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்தில், அஜித்துக்கு வில்லன் அரவிந்த் சாமி என்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த திரைப்படமான ’ஏகே62’ என்ற டம்மி தலைப்பில் புதிய திரைப்படம் தயாராக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த திரைப்படம், அஜித் ரசிகர்கள் மத்தியிலான அடுத்தகட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தனது புத்தாண்டு செய்தியாக அண்மையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதை விக்னேஷ் சிவன் உறுதி செய்தார்.

துணிவு பாணியில் இதிலும் நெகடிவ் தொனியிலான கதாப்பாத்திரத்தில் அஜித் தோன்றுவதாகவும், அஜித்துக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் 2 வில்லன்கள் என்பதால் விக்னேஷ் சிவன் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையும், ஆக்ஷனும் கலந்துகட்டி அடிக்க உள்ளார்.

மேலும், நடிகர் சந்தானம் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. காமடி கதாபாத்திரங்களை தவிர்த்துவிட்டு முழுமையான கதாநாயகன் அவதாரமெடுத்திருக்கும் சந்தானத்தை, அவருக்கான வித்தியாசமான தோற்றமும் அவற்றில் வரவேற்புக்குரிய வாய்ப்பும், சம்மதிக்க வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த இருவருக்கும் அப்பால், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது திரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் எவரேனும் ஒருவர் என்பதற்கு அப்பால், அஜித்துக்கு 2 ஜோடிகளாக இருவருமே நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்புகள் மட்டுமே இவற்றை உறுதி செய்யும் என்றபோதும், அஜித்தின் புதிய திரைப்படத்தில் அவரையும் சேர்த்து 2 வில்லன்கள் என்பதும், வித்தியாசமான வேடத்தில் சந்தானம் இணைந்திருப்பதும் குறித்தான தகவல்கள் அஜித் ரசிகர்களை குதூகலமடையச் செய்திருக்கின்றன.

SCROLL FOR NEXT