சினிமா

‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கில் நடிப்பது யார்?

காமதேனு

சூர்யாவின் ’சூரரைப் போற்று’படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம், 'சூரரைப் போற்று'. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெய்ன்மென்ட் தயாரித்தது. இதில், மோகன்பாபு, பரேஸ் ராவல், ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ், கிருஷ்ணகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்திருந்தார். சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்தப் படம், கடந்த 2020 ஆம் ஆண்டு, அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அக்‌ஷய் குமார், சூர்யா

ஏர் டெக்கான் விமான நிறுவனர், கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையப்படுத்திய இந்தத் திரைப்படம், இப்போது இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இந்திப் படத்தையும் இயக்குகிறார். வட இந்திய பின்னணியில் உருவாக இருக்கும் இதில், அஜய் தேவ்கன், ஹிருத்திக் ரோஷ்ன், ஜான் அப்ரஹாம், அக்‌ஷய் குமார் ஆகியோர் நடிக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், சூர்யா கேரக்டரில் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில்தான் அவர் இந்தப் படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.

அக்‌ஷய் குமார், மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’டிரைவிங் லைசன்ஸ்’படத்தின் இந்தி ரீமேக்கான ’செல்ஃபி’யில் இப்போது நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்ததும் ’சூரரைப் போற்று’ படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT