சினிமா

`7 வருடத்துக்குப் பின் படம் இயக்க வந்தது ஏன்?'- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம்

காமதேனு

``ஏழு வருடமாக டைரக்‌ஷனில் இருந்து விலகி இருந்தது ஏன்?'' என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்

தனுஷ் நடிப்பில் `3' என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அடுத்து, `வை ராஜா வை' படத்தை இயக்கினார். இந்தப் படம் 2015-ம் ஆண்டு வெளியானது. சமீபத்தில் ’முசாபிர்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கினார். இந்த ஆல்பம், பான் இந்தியா முறையில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியானது. தமிழில், இந்த ஆல்பத்துக்கு `பயணி' என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்திப் படத்தை இயக்க இருக்கிறார். இதை மீனு அரோரா தயாரிக்கிறார். இவர், அமிதாப் பச்சன் நடித்து வெளியான ’ஜுண்ட்’ (‘Jhund) படத்தைத் தயாரித்தவர். படத்துக்கு, ஒ சாதி சல் (Oh Saathi Chal) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டைரக்‌ஷனில் இருந்து விலகி இருந்தது ஏன் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

``என் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து படம் இயக்கவில்லை. அவர்கள் இப்போது வளர்ந்து விட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு கூட படம் இயக்க அதிக வாய்ப்புகள் வந்தன. ஆனால், அப்போது அந்த மனநிலையில் இல்லை. இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் படம் இயக்க வந்துவிட்டேன். ஏழு வருடத்துக்குப் பிறகு மீண்டும் டைரக்‌ஷன் துறைக்கு வந்ததில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

ஹிர்த்திக் ரோஷன், ரன்வீர் சிங் ஆகியோருடன் பணிபுரிய விருப்பம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT