சினிமா

‘அவர் ராவணனா... இல்லை தைமூரா?’ - ஆதிபுருஷுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு

காமதேனு

நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீஸர் வெளியானது முதல் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனக் கணைகளும் கண்டனக் கணைகளும் பாய்ந்துவருகின்றன. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தின் கதாபாத்திரங்களும், விஷூவல் எஃபெக்ட்ஸும் கடும் கேலிக்குள்ளாகியிருக்கின்றன.

ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், சைஃப் அலி கான், நடிகை கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. 500 கோடி ரூபாயில் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் டீஸர், ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. டீஸரைப் பார்த்த இணையவாசிகள் பலர், கிராபிக்ஸ் மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் மிக மோசமாக இருப்பதாக விமர்சித்தனர். அத்துடன் பல காட்சிகள் ஹாலிவுட் படங்களின் தாக்கம் கொண்டிருப்பதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட படத்தின் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமும் தொடர்ந்து கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, தனது முந்தைய படங்களில் இந்துத்துவக் கருத்தை ஆதரிக்கும் வகையிலான காட்சிகளை அமைத்திருந்த ஓம் ராவத், இந்தப் படத்தின் கதையமைப்பு காரணமாக ஆர்எஸ்எஸ், பாஜக என வலதுசாரிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். ராமாயணத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் சற்றே மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சூழலில், இப்படத்தை மகாராஷ்டிரத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக எம்எல்ஏ ராம் கதம் எச்சரிக்கை விடுத்துள்ளார். “விளம்பரத்திற்காக இந்துக் கடவுள்களை அவமதித்ததன் மூலம் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை மற்றும் மத உணர்வுகளைப் படத் தயாரிப்பாளர்கள் புண்படுத்திவிட்டனர். மன்னிப்பு கேட்பதாலோ அல்லது காட்சிகளை வெட்டினாலோ மட்டும் விட்டுவிடமாட்டோம். இது போன்ற மனநிலைக்கு தக்க பாடம் கற்பிப்பதோடு, இது போன்ற படங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ராவணன் கதாபாத்திரத்திற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ராவணன் கதாபாத்திரம் மொகலாய மன்னன் தைமூரை ஞாபகப்படுத்துவது போல் இருப்பதாக இணையவாசிகள் வறுத்தெடுக்கின்றனர். இந்தப் பாத்திரத்தில் நடிகர் சைஃப் அலிகான் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 12-ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. சமீப காலமாக இந்திப் படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுப்பது அதிகரித்துவருகிறது. அந்தப் பட்டியலில் ஆதிபுருஷும் இணைந்திருப்பது படத் தயாரிப்பாளர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

SCROLL FOR NEXT