ரேவதி
ரேவதி 
சினிமா

கீர்த்தி சுரேஷுடன் என்னை ஒப்பிடுவது சந்தோஷம் தான்!

ச.ஆனந்தப்பிரியா

என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் - ரேவதி நடித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16, 1947’ படம் ஏப்ரலில் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் ரேவதி. முதல் படமே பீரியாடிக் படமாக அமைந்தது, எப்படி இந்த அறிமுகம் கிடைத்தது, சினிமாவில் அடுத்த இலக்கு என்பது குறித்தெல்லாம் ரேவதி நம்மிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து...

முதல் படமே பீரியாடிக் கதை என்பது சவாலாக இருந்ததா?

‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தில்...

இந்தப் படம் நானே தேடிச்சென்ற வாய்ப்பு கிடையாது. அதுவே என்னைத் தேடி வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோரும் கதையைக் கேட்டுத்தான் ஓகே சொல்வார்கள். ஆனால், என்னை படத்திற்கு ஓகே செய்த பிறகுதான் இயக்குநரிடம் இருந்து கதையே கேட்டேன். கதை சொல்லும்போதே படத்தை திரையில் பார்ப்பது போல, தத்ரூபமாக இயக்குநர் எனக்குச் சொல்லிக் காண்பித்தார். எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரஸ்யமான கதை.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் தோழியின் தந்தை ஒருவர் எடுத்தப் புகைப்படத்தை இயக்குநரும் இந்தப் படத்தின் தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ் சார் பார்த்திருக்கிறார். அவர்தான் என்னை இந்தப் படத்திற்கு சரியாக இருப்பேன் என பொன்குமார் சாரிடம் சொல்லி இருக்கிறார். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் முருகதாஸ் சார்தான்.

சுதந்திரப் போராட்டக் கதை எனும்போது அதில் பெண்களின் முக்கியத்துவம் நிஜத்தில் அதிகம். கதையில் எந்த அளவுக்கு அது காட்டப்பட்டு இருக்கிறது?

நிஜத்தில் மட்டுமல்ல, இந்தப் படத்திலும் பெண்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் காலத்தில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள். என்ன மாதிரியான காலகட்டத்தில் அவர்கள் இருந்திருக்கிறார்கள். என்னவெல்லாம் அவர்களுக்கு நடந்திருக்கிறது என்பதையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படத்தில் எனக்கு சவாலாக இருந்த விஷயம் என்றால் படப்பிடிப்புத் தளத்தின் க்ளைமேட்தான்.

வேலூருக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில்தான் படப்பிடிப்பு முழுவதும் நடந்தது. வெயில், குளிர் என காலநிலை மாறி மாறி இருந்தது. கெளதம் சார் அப்போதுதான் ஊட்டியில் இருந்து வந்திருந்தார். அவருக்கு வெயில் செட்டாகவில்லை. குளிர் காலத்தில் நான் அஞ்சாறு ஜாக்கெட் அணிந்திருந்தேன். இதுபோன்ற விஷயங்கள்தான் சவாலாக இருந்தது. மற்றபடி, இயக்குநர் என்ன சொன்னாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறேன்.

வழக்கமான கதாநாயகி போல இல்லாமல், முதல் படத்திலேயே இப்படியான ஒரு கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தில்...

முதல் படமே பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. மேலும், இயக்குநர் கதை சொன்ன விதமும், கதையும் பிடித்திருந்தது. கதையில் என்னுடைய பெயர் தேன்மல்லி. இப்படி கதாபாத்திரம் தாண்டி, என் பெயரே தனித்துவமானது. கதைப்படி வீட்டில் இருந்து அதிகம் வெளியே வராத பெண் நான். மிகவும் அப்பாவி. அவள் எந்த அளவுக்கு கதையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறாள் என்று கதை நகரும். கெளதம் கார்த்திக் சார் படத்தின் கதையில் மிகவும் ஒன்றிவிட்டார். கதையில் சில இடங்களில் அவரும் நிறைய விஷயங்களை இயக்குநரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்; கலந்துரையாடுவார். கதையில் எனக்கு சந்தேகம் வந்தால் கூட அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

‘ஆகஸ்ட் 16, 1947’ கதை ஒரு சின்ன கிராமத்தில் நடக்கும் ஒரு அழகான கதை. ஒரு வாரத்தில் நடக்கும் ஒரு ஃபீல் குட் கதைதான் களம். அதனால், தலைப்பைப் பார்த்துவிட்டு சீரியஸான படம் என நினைக்க வேண்டாம்.

பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கிறீர்கள் என்ற ரசிகர்களின் கமெண்ட்டை கவனித்தீர்களா?

ரேவதி

முதலில் இந்த கமெண்ட்டைப் பார்க்கும்போது எனக்கும் ‘அப்படியா இருக்கிறோம்’ எனத் தோன்றியது. ஒருவேளை, என் சிரிப்பைப் பார்த்து அப்படிச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். கீர்த்தி சுரேஷ் ஒரு திறமையான நடிகை. அவருடன் என்னை ஒப்பிடுவது எனக்கு சந்தோஷம்தான். இதில் கேலி செய்வதற்கோ வருத்தப்படவோ ஏதும் இல்லை.

SCROLL FOR NEXT