அபர்ணா தாஸ்
அபர்ணா தாஸ் டாடா பட நாயகி
சினிமா

இந்த வாய்ப்பு கவினால் தான் எனக்குக் கிடைத்தது!

ச.ஆனந்தப்பிரியா

‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகை அபர்ணா தாஸூக்கு கதாநாயகியாக தமிழில் நல்ல வரவேற்புக் கொடுத்திருக்கிறது ‘டாடா’. இந்தப் படத்தில் நடித்த அனுபவம், மலையாளத்தில் நடித்து வரும் படங்கள், தனது சினிமா பயணம் உள்ளிட்டவை குறித்து ‘காமதேனு’ விடம் அபர்ணா மனம்திறந்து பேசினார். அதிலிருந்து...

கதாநாயகியாக தமிழில் உங்களது முதல் திரைப்பட அனுபவம் எப்படி இருந்தது?

ஆமாம்! ‘பீஸ்ட்’ பட சமயத்தின்போதே, கவின் எனக்கு அறிமுகம். ‘டாடா’ இயக்குநர் கணேஷ், கவின் எல்லாம் நண்பர்கள். நான் இந்தக் கதைக்கு சரியாக வருவேன் என கவின்தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அதற்கு கவினுக்கு மிகப்பெரிய நன்றி. ’டாடா’ கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மக்களுக்கும் அது பிடித்துப்போய் ஆதரவு கொடுத்து வருவதற்கு நன்றி.

இந்தப் படத்தில் எமோஷனலான காட்சிகள் அதிகம் இருப்பதால் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை இது. அதை உணர்ந்தே செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். குறிப்பாக, க்ளைமேக்ஸ் காட்சியில் சிறப்பான நடிப்பைத் தந்துவிட வேண்டும் என்பதற்காக ஒன்றுக்குப் பலமுறை ரிகர்சல் பார்த்தே நடித்தேன்.

டாடா படத்தில்...

தமிழ்ப்படங்களில் உங்கள் முதல் கதாநாயகன் கவினுடன் நடித்தது பற்றி சொல்லுங்கள்?

படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஆரம்பத்தில் கொஞ்சம் ஜாலியாகவும் பிறகு மெச்சூர்டாகவும் இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அவரை எதாவது கோபப்படுத்தினால் மட்டுமே அதிகம் பேசுவார். இல்லை என்றால் படத்தில் வருவது போன்றே அமைதியான கேரக்டர்தான் கவின்.

மலையாள சினிமாவில் இருந்து வந்தவர் நீங்கள். பான் இந்திய படங்கள் என்ற விஷயம் அதிகம் பேசப்படும் சமயத்தில் ரீஜினல் கன்டென்ட் படங்களை இன்னும் மலையாள சினிமா வெளியிடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அபர்ணா தாஸ்

மலையாள சினிமாவில் இருந்து வந்திருக்கிறேன் என்பதை சொல்வதற்கே பெருமையாக இருக்கிறது. சமீபத்தில் கூட, தெலுங்குப் படம் ஒன்றில் வேலை பார்த்தேன். அதில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் வில்லனாக நடித்திருந்தார். நாங்கள் இரண்டு பேர் அங்கு இருக்கிறோம் என கேள்விப்பட்டு பக்கத்தில் இருக்கும் இன்னொரு நடிகரின் மேனேஜர் எங்களைப் பார்ப்பதற்காகவே வந்திருந்தார். இதுபோன்ற விஷயங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

நீங்கள் சொல்வதுபோல, பான் இந்திய படங்கள் என்ற விஷயம் தற்போது பெரிதாகப் பேசப்படுகிறது. அதற்கென்று ஒரு தனி பிசினஸ் இருக்கவே செய்கிறது. மலையாளத்தில் இதுபோன்ற விஷயங்களை நினைத்து படங்கள் எடுக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. நல்ல கதையும் நடிகர்களும் எங்கிருந்தாலும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் போய் சேர்வார்கள் என்பதுதான் என் எண்ணம். ‘காந்தாரா’ என்ற ஒரு படம் வந்தது. நன்றாக இருக்கப்போய்தான் உலகம் முழுக்க பேசப்பட்டது. நமக்கான கதையை எடுப்போம். அது எல்லாருக்குமானதாக இருந்தால் அது அனைவரையும் சென்றடையும்.

டாடா’ படத்தில் உலகில் பல பிரச்சினைகளுக்கு காரணம் அப்பாதான் என்று ஒரு வசனம் வரும். அதுபோல, உங்கள் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா?

அபர்ணா தாஸ்

நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூரில்தான். அப்பாவை விட அம்மா நன்றாக ஆங்கிலம் பேசுவார். என்னுடைய டீச்சர்ஸ் எல்லோருமே ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அதனால், ரேங்க் கார்ட், அட்டெண்டன்ஸ் போன்ற பிரச்சினைகள் வந்தால் அப்பாவிடம் கொடுத்து பேசச் சொல்லிவிடுவேன். அவர் அந்தப் பக்கம் என்ன சொன்னாலும் ‘ஓகே, ஓகே’ என்று சொல்லி வைத்துவிடுவார். ஆனால், அம்மா விவரமாக கேள்விகேட்டு என்னிடம் ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொள்வார். அதனால், எனக்கு அப்போதெல்லாம் பல பிரச்சினைகளுக்குக் காரணம் என் அம்மாதான்.

படத்தில் இயக்குநர் பாக்யராஜ், விடிவி கணேஷ் இவர்களும் நடித்திருக்கிறார்கள். என்ன சொன்னார்கள்?

அபர்ணா தாஸ்

’பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு விடிவி சாருடன் இரண்டாவது முறையாக நடிக்கிறேன். திரையில் மட்டுமல்ல, நேரிலும் அவர் ஜாலியான நபர்தான். என் அம்மா பாக்யராஜ் சாருடைய மிகப்பெரிய ரசிகை. அவருடன் நடித்ததை என் அம்மா மிகப்பெரிய ஆசீர்வாதமாகவே நினைக்கிறார். நான் அவருடன் நடிப்பேன் என்பதை அம்மா எதிர்பார்க்கவே இல்லை. நிறைய விஷயங்கள் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். என் சினிமா பயணத்தின் ஆரம்பத்திலேயே அவருடன் இணைந்து நடித்தது பெருமையாக இருக்கிறது.

அடுத்து என்ன படங்கள் நடித்து வருகிறீர்கள்?

இப்போதைக்கு மலையாளப் படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறேன். தமிழில் ‘டாடா’ படம் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கிறேன்.

SCROLL FOR NEXT