சினிமா

'எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கிப் பாக்குறீங்க, திருத்த முடியாது': நடிகர் சங்கத்தை ட்விட்டரில் சாடிய ஷாந்தனு

காமதேனு

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து ஆறு மாத காலத்திற்கு கே.பாக்யராஜ் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும வகையில், அவரது மகன் நடிகர் ஷாந்தனு வெளியிட்டுள்ள ட்விட் தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட, தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், சங்க விதிகளை மீறி புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் கே.பாக்யராஜ், உதயா ஆகியோர் செயல்பட்டதாக அவர்கள் மீது உறுப்பினர்கள் சிலர், புகார் கூறியிருந்தனர். அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்குப் பதில் திருப்தி தராததால், 24 பேர் கொண்ட குழு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. அதன்படி நடிகர் சங்கத்தில் இருந்து அவர்கள் இருவரும் ஆறு மாதத்துக்கு நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கே.பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு அவரது மகனும், நடிகர் ஷாந்தனு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், " எவ்வளவு கீழ இறங்க முடியுமோ, அவ்வளவு இறங்கிப் பாக்குறீங்க... திருத்த முடியாது" என்று கோபமாக பதிவிட்டுள்ளார். அத்துடன், " இந்த பதிவு எந்த படத்திற்கும், ரசிகருக்கும் சம்பந்தமில்லை" என்று ரீவிட் செய்துள்ளார்.

தனது தந்தை பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரை மறைமுகமாக தாக்கி நடிகர் ஷாந்தனு வெளியிட்டுள்ள இந்த ட்விட் தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT