செய்தியாளர்கள் சந்திப்பில் மகேந்திரன்... 
சினிமா

விஜய் அண்ணா சினிமாவை விட்டு விலகுவது வருத்தம் தான்... மாஸ்டர் மகேந்திரன் ஆதங்கம்!

காமதேனு

சீமான், சரண், அருண்ராஜா காமராஜ், கல்யாண் ஆகிய நான்கு இயக்குநர்கள் சனா ஸ்டுடியோஸின் முதல் படத்தின் தயாரிப்பை இன்று தொடங்கி வைத்தனர்.

சர்வைவல் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் பூஜை இன்று நடைபெற்ற பின்பு, பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடந்தது. அப்போது நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தான கேள்விக்கும் மாஸ்டர் மகேந்திரன் பதிலளித்தார்.

படப்பூஜையில்...

அண்மைக்காலமாகவே நடிகர் விஜயின் அரசியல் வருகைதான் பலருக்கும் பேசுபொருளாக இருக்கிறது. முன்னமே ஒப்புக் கொண்ட இரண்டு படங்களையும் முடித்துவிட்டு விரைவில் சினிமை விட்டு விலகி முழு நேர அரசியலுக்கு வருகிறார் விஜய்.

இந்தச் சூழ்நிலையில், குழந்தை நட்சத்திரமாக விஜயுடன் பல படங்கள் நடித்த மாஸ்டர் மகேந்திரனிடம் விஜயின் அரசியல் வருகை குறித்தும் அவர் அரசியலில் தாக்குப் பிடிப்பாரா எனவும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் சொன்ன மகேந்திரன், “விஜய் அண்ணா சினிமாவை விட்டு விலகுவது எனக்கும் வருத்தம்தான். நிச்சயம் யோசிக்காமல் அவர் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார். அவரை நான் ’மின்சார கண்ணா’ படத்தில் இருந்தே பார்க்கிறேன். அதன் படப்பிடிப்பின் போது தன்னைப் பார்ப்பதற்காகப் பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்களை ஏன் தன்னிடம் விடவில்லை என உதவியாளரைத் திட்டினார்.

படப்பூஜையில்

அதன் பின்னர், ரசிகர்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டுதான் அவர் வீட்டிற்குத் திரும்பினார். அவர் நிச்சயம் அரசியலுக்காக மக்களை திடீரென சந்தித்து உதவவில்லை. அவர் பல வருடங்களாகவே ரசிகர் மன்றம் சார்பாக பல உதவிகளை செய்து வருகிறார். அவர் சிஎம் ஆனாலும் எனக்கு மகிழ்ச்சிதான். யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் தங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்று மக்களிடம் கேட்பேன்” என்றார்.

SCROLL FOR NEXT