சினிமா

'பொன்னியின் செல்வன்', 'சர்தார்', 'கைதி' 2-ம் பாகங்களில் கவனம் குவிக்கும் கார்த்தி

காமதேனு

’பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’, ‘கைதி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என கைவசம் உள்ள சீக்வல் படங்களால் நடிகர் கார்த்தி கவனம் ஈர்த்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ஒரு வாரமாக உள்ள நிலையில் சுமார் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. மேலும், அடுத்த மாதம் 4-ம் தேதி வரை வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் இந்த வசூல் நிலவரம் அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ‘சர்தார்’ படக்குழு பத்திரிக்கையாளர்களை நேற்று சந்தித்தது. ஏற்கெனவே, ‘சர்தார்’ படம் முடியும் போதே, இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்தே முடித்திருப்பார்கள். இந்த நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஜூன் அல்லது அதற்குப் பிறகு வெளியாகும் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். அதேபோல, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019-ல் தீபாவளி வெளியீடாக வந்த ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கானப் படப்பிடிப்பும் அடுத்த வருடம் தொடங்க உள்ளது என நடிகர் கார்த்தி தனது சமீபத்திய பேட்டிகளில் உறுதி செய்தார்.

இதுமட்டுமல்லாது, இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் உருவான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் 2024-ல் தொடங்கும் என முன்பே இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருந்தார்.

இப்படி ரசிகர்கள் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் அனைத்து முக்கியப் படங்களின் இரண்டாம் பாகத்திலும் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த வருடம் கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ என அனைத்துப் படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் தவிர்த்து ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்திலும் நடிகர் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

SCROLL FOR NEXT