சினிமா

`என் படத்தைப் புறக்கணிக்க வேண்டாம்’: திடீர் வேண்டுகோள் விடுத்த பிரபல ஹீரோ

காமதேனு

``நான் நடித்துள்ள ’லால் சிங் சத்தா’ படத்தைப் புறக்கணிக்க வேண்டாம்'' என்று நடிகர் அமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தி நடிகர் ஆமிர்கான் நடித்துள்ள படம், ’லால் சிங் சத்தா’. இது, 'ஃபாரஸ்ட் கம்ப்' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 11-ம் தேதி ரிலீஸ் ஆகும், இந்தப் படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில், #boycottLaalSinghChaddha என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

கடந்த 2015-ம் ஆண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆமிர்கான், நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதால் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று தனது மனைவி அறிவுறுத்தியதாகக் கூறினார். சகிப்புத் தன்மைக்கு எதிராக நடைபெறும் செயல்களை அரசு கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வீடியோக்களை ட்விட்டரில் இப்போது பகிர்ந்துள்ள சிலர், ஆமிர்கானின் ’லால் சிங் சத்தா’ படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் தனது படத்தை புறக்கணிக்க வேண்டாம் என்று ஆமிர்கான் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ’’நான் இந்தியாவை பிடிக்காதவன் என்று சிலர் நம்புவது வருத்தமாக இருக்கிறது. அது முற்றிலும் பொய். நான் நாட்டை மிகவும் நேசிக்கிறேன். சிலர் என்னைப் பற்றி தவறாக உணர்வது துரதிர்ஷ்டமானது. என் படங்களைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து பாருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT