சினிமா

உள்ளம் கவர்ந்த ‘உரிமைக்குரல்’: இன்னும் நம்மை இழுக்கும் ‘விழியே கதை எழுது!’

வி.ராம்ஜி

ஜமீன்களும் பண்ணையார்களும் ஏழைகளுக்கு இருக்கிற மிச்சசொச்ச நிலங்களையும் கபளீகரம் செய்ய எதையும் செய்வார்கள் என்று எத்தனையோ கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியொரு நில அபகரிப்பு நடக்கக்கூடாது, நடக்க விடமாட்டேன் என்று எம்ஜிஆர் விடுத்த ‘உரிமைக்குரல்’ நமக்கு ஞாபகம் இல்லாமலா இருக்கும்?

ராம - லட்சுமணன் போல அண்ணன் தம்பிகள். சீதையைப் போலொரு அண்ணி. லட்சுமணனைப் போல் இருக்கும் தம்பியின் பெயர் கோபி (எம்ஜிஆர்). அழகாகப் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை. அந்த ஊரில் பண்ணையார் குடும்பம். அங்கே அந்த வீட்டுப் பெண்மணி வைத்ததுதான் சட்டம். அவரின் கணவர் ‘ஐயோபாவம்’ ரகம். அவர்களின் மகன் துரை (நம்பியார்) அடாவடி செய்பவன். அத்துமீறுபவன். அவனுக்கு ஒரு தங்கையும் உண்டு.

அந்த ஊரில், ராதாவின் (லதா) குடும்பமும் இருக்கிறது. சிறுவயதிலேயே கோபிக்குத்தான் ராதா, ராதாவுக்குத்தான் கோபி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ராதாவைச் சீண்டி, கிண்டலும் கேலியும் செய்வதுதான் கோபியின் வேலை. கோபியை சந்தர்ப்பம் பார்த்து குழிக்குள் தள்ளி, அவனிடம் ரகளை பண்ணுவதுதான் ராதாவின் விளையாட்டு.

இந்த நிலையில், அண்ணனும் தம்பியும் கையெழுத்துப் போட்டு பண்ணையார் வீட்டில் பணம் கடனாக வாங்குவார்கள். அதை வைத்துக்கொண்டு பண்ணையாரம்மாவும் மகனும் சதித்திட்டம் போடுவார்கள். ராதாவிடம் அப்பாவிடம் பண்ணையாரம்மாவின் மகன் துரை, பேசி, ராதாவைத் திருமணம் செய்துகொள்ள அம்மாவை அனுப்பிவைப்பான். அம்மா வந்து பேச, ராதாவின் அப்பாவும் சம்மதித்துவிடுவார்.

கோபி நொந்துபோவார். ராதா கலங்கிப் போவார். என்ன செய்வது என்றே தெரியாமல் கோபியின் அண்ணனும் அண்ணியும் வேதனைப்படுவார்கள். ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இல்லேன்னா செத்துப்போயிருவேன்’ என்று கோபியிடம் ராதா சொல்லிவிட்டுப் போக, இன்னும் செய்வதறியாது கைபிசைந்து தவிப்பார் கோபி.

திருமணம். மாப்பிள்ளையாக துரை ஜம்மென்று உட்கார்ந்திருப்பார். ‘பெண்ணைக் காணோம்’ என்று எல்லோரும் அலறுவார்கள். ராதாவை அழைத்துக்கொண்டு திருமணப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று பதிவுத் திருமணம் செய்துகொள்வார் கோபி. கல்யாணமான கையுடன் வீட்டுக்கு வந்தால், அண்ணன் கடும்கோபம் கொள்வார். ‘இனி நீ யாரோ, நான் யாரோ’ என்று சொல்லிவிடுவார். வீட்டைப் பாதியாக்கி அவர்களைத் தங்கச் சொல்லிவிடுவார். மீதமுள்ள சொத்துகளையும் பங்கிட்டுப் பிரித்துக் கொடுத்துவிடுவார்.

வீடு ரெண்டாகும். நடுவே சுவர் எழுப்புவார் அண்ணன். தம்பி ஒத்துக்கொள்ளமாட்டார். பிறகு ஓலைச் சுவர் எழுப்பப்படும். கோபியும் ராதாவும் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்க, அண்ணன் பேசவில்லை என்பது தவிர குறையொன்றுமில்லை. அந்தச் சமயத்தில் பண்ணையார் மகன் துரையின் ஆட்கள், நிலத்தில் இரவுப் பாதுகாப்புக்கு இருக்கும் கோபியைக் கத்தியால் குத்திவிடுவார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பார். கெட்டதிலும் நல்லது என்பது போல், பிரிந்திருந்த அண்ணன் அண்ணி வருவார்கள். ராதாவின் அப்பாவும் அம்மாவும் வருவார்கள்.

ஒருவழியாக குடும்பம் சேர்த்துவிட்டது என்று நினைத்தால், அங்கே துரையின் வில்லத்தனம் வில்லங்கம் பண்ணும். ‘பணத்தைத் திருப்பித் தரவில்லையென்றால், நிலம் ஏலம் விடப்படும்’ என்று தேதி குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்புவார். ராதாவின் நகைகளை அவருடைய அம்மா கொடுக்க, வேறு வழியின்றி அந்த நகைகளைக் கொண்டு அடகு வைத்து, பணம் புரட்டி வருவார். இங்கே அவசரம் அவசரமாக ஏலம் நடக்கும்.

ஏலம் முடிவதற்குள் பணத்தைத் தருவார் கோபி. ஆனால் ஏலம் முடிந்த பிறகுதான் பணம் தந்தாய் என்று வம்படி செய்வார் துரை. அத்துடன் ராதாவையும் கடத்திச் சென்றுவிடுவார் துரை. பின்தொடர்ந்து சென்று ராதாவைக் காப்பாற்றி, நிலத்தையும் பாதுகாத்து, துரையை காவல் துறையிடம் ஒப்படைப்பார் கோபி. முன்னமேயே, ஓலைச்சுவர் பிடுங்கப்பட்டிருக்கும். எல்லோரும் இனிதே வாழ்வார்கள் என்று ‘சுபம்’ போடப்படும்.

இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய படம் இது. 1959-ம் ஆண்டு ‘கல்யாண பரிசு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஸ்ரீதர். இதையடுத்து ஜெமினி, முத்துராமன், சிவாஜி என பலரை வைத்து, பல படங்களை இயக்கினார். 1965-ம் ஆண்டில் ’வெண்ணிற ஆடை’ படத்தை எடுக்கும்போது, எம்ஜிஆரை வைத்து ‘அன்று சிந்திய ரத்தம்’ எனும் படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

‘வெண்ணிற ஆடை’, ‘அன்று சித்திய ரத்தம்’ இரண்டு படங்களின் அறிவிப்பையும் ஒரேசமயத்தில் வெளியிட்டு விளம்பரப்படுத்தினார். இங்குதான் பிரச்சினை உருவானது. ஸ்ரீகாந்த், அறிமுக நடிகை ஜெயலலிதா முதலானோர் நடித்த ‘வெண்ணிற ஆடை’ வண்ணப்படம் என்றும் எம்ஜிஆரை வைத்து இயக்கும் ‘அன்று சிந்திய ரத்தம்’ கறுப்பு - வெள்ளைப்படம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் எம்ஜிஆர் வருத்தப்பட்டதாகவும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் கோபப்பட்டு ஏதேதோ பேசியதாகவும் அதனால்தான் ‘அன்று சிந்திய ரத்தம்’ அப்படியே நின்றுவிட்டது என்றும் அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

ஆக, 1964-ம் ஆண்டில் எம்ஜிஆரும் ஸ்ரீதரும் இணைய இருந்தார்கள். அது கைவிடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இருவரும் ‘உரிமைக்குரல்’ மூலமாக இணைந்தார்கள்.

எம்ஜிஆர், லதா, சகஸ்ரநாமம், அஞ்சலிதேவி, சி.கே.சரஸ்வதி, வி.கே.ராமசாமி, நம்பியார், நாகேஷ், சச்சு, தேங்காய் சீனிவாசன், வி.எஸ்.ராகவன், புஷ்பலதா முதலானோர் நடித்த இந்தப் படம் வண்ணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் முழுக்கக் கட்சிக் கரை வேஷ்டியிலேயே எம்ஜிஆர் நடித்திருந்தார். அதேபோல், ஜிப்பாவாகவும் இல்லாமல் சட்டையாகவும் இல்லாமல், ஒரேயொரு காலர் மட்டும் கொண்ட சட்டையை அணிந்ததை ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள். அவர் ஓட்டிவரும் குதிரை வண்டிகூட ரசிக்கப்பட்டது.

சி.கே.சரஸ்வதி பண்ணையாரம்மா. அவரின் கணவர் வி.கே.ராமசாமி. மனைவி கெட்டவர். கணவர் நல்லவர். இதுவே ‘சகலகலா வல்லவன்’ படத்திலும் இருக்கும். அண்ணன் சகஸ்ரநாமமும் தம்பி எம்ஜிஆரும் பிரிவார்கள். வீட்டுக்கு நடுவே, ஓலைச்சுவர் எழுப்பப்படும். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில், ‘கோதாவரி, வீட்டுக்கு நடுவே கோட்டைக் கிழி’ என்று விசு சொல்வதும் நினைவுக்கு வந்திருக்குமே!

எம்ஜிஆர் - லதா குறும்புகள் ரசிக்கவைத்தன. கூடவே கிளாமரும் சேர்த்துக் கொடுத்தன. எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளிலும் புகுந்து விளையாடினார். படத்தின் டைட்டிலில், ஆரம்பத்தில், முகலிவாக்கம் கிராம மக்களுக்கு நன்றி என்று போடப்படுகிறது. அப்போது முகலிவாக்கம், கிராமமாகத்தான் இருந்திருக்கிறது. அதேபோல், படப்பிடிப்புக்குத் தன் தோட்டத்தைத் தந்து உதவிய நண்பர் கே.பாலாஜி என்று டைட்டிலில் இடம் பெறுகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜியைத்தான் குறிப்பிடுகிறது போலும் இந்த நன்றி அறிவிப்பு.

நம்பியாரின் வில்லத்தனம் மிரட்டலாக இருக்கும். நாகேஷ், சச்சுவின் காமெடி கொஞ்சம் விரசம் தூக்கலாகத்தான் இருந்தது. சகஸ்ரநாமம் தன் பண்பட்ட நடிப்பால் கலங்கடித்திருப்பார். மெல்லிசை மன்னரின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

‘நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு பறிக்கக்கூடாதோ லேசாத் தொட்டு’ என்ற பாடல் பட்டையைக் கிளப்பியது. ‘பொண்ணாப் பொறந்தா ஆம்பளைகிட்ட கழுத்தை நீட்டிக்கணும்’ என்ற பாடலும் ஹிட்டடித்தது. ‘மாட்டிக்கிட்டாரடி’ பாடலும் டப்பாங்குத்துப் பாடலாக, ‘கட்டவண்டி கட்டவண்டி’ ஸ்டைல் பாடலாக அமைந்து ரசிக்கவைத்தது. ’விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே’ என்ற பாடல் எல்லோரையும் முணுமுணுக்கச் செய்த காதல் பாடலாக அமைந்தது. ‘ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா’ என்ற பாடலும் வெற்றியையே பெற்றது. ‘கல்யாண வளையோசை கொண்டு’ என்ற பாடல் மெலடியில் மயக்கிப்போட்டது! கண்ணதாசனும் வாலியும் பாடல்களை எழுதினார்கள். ’ஒருதாய் வயிற்றில்’ பாடலைக் கேட்டு படம் பார்த்த அண்ணன்களும் தம்பிகளும் அழுதேவிட்டார்கள்.

திருச்சியில் ராக்ஸி தியேட்டரில் இந்தப் படம் வெளியானபோது எனக்கு ஆறு வயது. டிக்கெட் எடுத்தாகிவிட்டது. ஆனால் முந்தைய காட்சி முடியவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில், தியேட்டரில் வேலை பார்க்கும் ஐயா ஒருவர், ‘அழுவாதடா கண்ணு. இப்போ நீ படம்தானே பாக்கணும். வா என் கூட’ என்று அழைத்துக்கொண்டு, தியேட்டருக்குள் கதவருகில் நிறுத்தி கைப்பிடித்துக்கொண்டார். எம்ஜிஆரும் லதாவும் ‘கல்யாண வளையோசை’ பாடலைப் பாடினார்கள். அதன் பிறகு உண்டான அரைமணி நேரப் படத்தை நின்றுகொண்டே பார்த்துவிட்டு, அடுத்த காட்சியை ஜம்மென்று உட்கார்ந்து பார்த்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றன.

1974 நவம்பர் மாதம் 7-ம் தேதி வெளியான ‘உரிமைக்குரல்’ அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றது. எம்ஜிஆருக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. லதாவின் சிறந்த நடிப்பும் பேரழகும் பெரிதாகவே பேசப்பட்டன. படம் பல தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதையடுத்து சிவாஜியை வைத்தும் எம்ஜிஆரை வைத்தும் என பல படங்களை இயக்கினார் ஸ்ரீதர்.

படம் வெளியாகி, 48 ஆண்டுகளாகின்றன. இன்னமும் ‘கல்யாண வளையோசை’ கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. ‘விழியே கதை எழுது’ எனும் ஜேசுதாஸின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.

SCROLL FOR NEXT