சினிமா

புத்தாண்டு பாட்டு: 40 ஆண்டுகளாக தனியிடம் பிடித்த 'ஹேப்பி நியூ இயர்' சகலகலா வல்லவன் பாட்டு!

வி.ராம்ஜி

பொதுவாகவே, பாடலுக்கும் நமக்கும் ஏதோவொரு பந்தம் அமைந்துவிடும். அந்தப் பாடலின் வரிகள், பாடலுக்கான சூழல், படத்தின் கதை அமைப்பு, கதையையும் சூழலையும் காட்சியையும் சொல்லாமல் சொல்லுகிற இசை என்று நம்மை என்னவோ செய்யும். அந்தக் காலத்தில், கல்யாண வீடுகளில், ‘வாராய் என் தோழி வாராயோ’ பாடாத வீடுகளே இல்லை. அதேபோல, ‘மணமகளே மணமகளே வா வா’ என்ற பாடலையும் ஒலிக்கவிட்டுக் குதுகாலித்தது தமிழகம். அப்படித்தான் ஒவ்வொரு புத்தாண்டின் போதும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் குடியிருக்கும் பகுதிகளில், வீடுகளில், தொலைக்காட்சிகளில், ரேடியோக்களில் ஒலிபரப்பிக்கொண்டே இருக்கிறது; ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பாடல், ‘விஷ் யூ ஹேப்பி நியூ இயர்’ என்று தொடங்கி ‘இளமை இதோ இதோ’ என்று துள்ளலாட்டம் போடவைத்த, வைத்துக்கொண்டிருக்கிற ‘சகலகலாவல்லவன்’ பாடல்!

1982 ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது ‘சகலகலா வல்லவன்’ திரைப்படம். ஏவி.எம். பிரம்மாண்டமாக தயாரித்தது. கமல் தன் முழுநடிப்பையும் ஆக்‌ஷனையும் காட்டி, சி சென்டர் ஏரியாவில் கல்லா நிரப்பினார். அம்பிகா ஜோடியாக நடித்தார். நடிகை துளசி இதில்தான் அறிமுகமானார். பஞ்சு அருணாசலம் கதை, வசனம் எழுதினார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயல்பாக இயக்கினார்.

சாதாரணக் கதைதான். தங்கைக்கு வாழ்வு கொடுக்க அண்ணன், என்னவெல்லாம் செய்கிறான் என்கிற வழக்கமான கதைதான். தங்கையைச் சீரழித்தவனுடன் சேர்க்கவேண்டும், திமிருடன் திரியும் நாயகியை திருமணம் செய்து அடக்கிவிடவேண்டும், பணத்திமிருடன் இருக்கும் பண்ணையாரம்மாவுக்கு பாடம் புகட்டவேண்டும் என்றெல்லாம் சேர்த்துக் கோத்துக் கொடுத்த சகல பூக்களும் கொண்ட சரமாக ஜொலித்தான் ‘சகலகலா வல்லவன்’.

ஆனால், சொல்லப்பட்டதில்தான் நகாசு பண்ணினார்கள். படத்தின் ஆரம்பம் தொடங்கி இடைவேளை வரை, முழுக்க முழுக்கக் கிராமத்தில் நடக்கும் கதை, இடைவேளைக்குப் பிறகு நகரத்துக்கு வருகிறது. முதல் பாதியில் கிராமத்து பாஷையும் குடுமியும் முறுக்கிவிட்ட மீசையும் தெனவெடுத்த தோள்களுமாக இருக்கிற கமல், இடைவேளைக்குப் பிறகு சிறிய அளவில் செதுக்கிய மீசையும் நுனிநாக்கு ஆங்கிலமும் குறுந்தாடியுமாக வலம் வந்தது கதையின் ட்விஸ்ட். அமெரிக்க ரிட்டர்ன் இளைஞராக கமல் வந்து எண்ட்ரி கொடுக்கவேண்டும். அதுவும் புஷ்பலதா, அம்பிகா, ரவீந்தர், வி.கே.ராமசாமி ஆகியோரை ஈர்க்கவேண்டும்.

இந்த வேடத்துக்கும் பணத்துக்கும் வி.கே.ராமசாமிதான் திட்டமிடுகிறார். தன் நண்பர் தேங்காய் சீனிவாசனிடம் சொல்லி, அவர்களின் மகனாகவும் மகளாகவும் கமலும் துளசியும் வேறொரு ஸ்டைலுடன் வருகிறார்கள்.

இடைவேளைக்கு முன்பு, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ என்ற டைட்டில் பாட்டு. இளையராஜா பாடியிருப்பார். ‘கட்டவண்டி கட்டவண்டி’ என்று மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். இதெல்லாம் கிராமத்து வடிவில் அமைந்த அட்டகாசமான பாடல்கள், குத்தாட்டம் போடவைத்தன.

இடைவேளைக்குப் பிறகு அமெரிக்க இளைஞராக ஆங்கிலம் பேசுகிற கமலின் ஆட்டம் ஆரம்பம். அதுவும் ஆட்டம், பாட்டத்துடன் ஆரம்பம். இதைத்தான் இசைஞானியிடம் சொன்னார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். ‘’என்ன விழா அது?’’என்று இளையராஜா கேட்டார். ‘’எதுவாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பிரமாண்டமான செட் பொட்டு, லைட்டிங்கெல்லாம் வைத்து, கமலின் நடனத்திறமையை அங்கே பயன்படுத்திக் கொள்வது போல் ஒரு பாட்டு. ஒரு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி என்று கூட வைத்துக் கொள்ளலாம்’’ என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் பஞ்சு அருணாசலமும் தெரிவித்தார்கள்.

இதை உள்வாங்கிக் கொண்டு, அந்தக் காட்சிக்கு ஏற்ப, வெரைட்டி காட்டுவதற்காக, கிராமத்து இசைக்கு நேர்மாறாக இளையராஜா அமைத்ததுதான் ‘இளமை இதோ இதோ... இனிமை இதோ இதோ...’ என்கிற பாடல்.

எல்லாப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். இந்தப் பாடலையும்தான். முன் பகுதி பாடல்களுக்கு மலேசியா வாசுதேவனைப் பயன்படுத்திய இளையராஜா, பிற்பாதியில் ‘ஹேப்பி நியூ இயர்’ பாடலுக்கும் ‘நேத்து ராத்திரி யம்மா’ பாடலுக்கும் எஸ்.பி.பி.யைப் பாடவைத்தார். இடைவேளைக்குப் பிறகு வருகிற கிராமத்துக் கனவுப் பாடலான ‘நிலாகாயுது’ பாடலை மலேசியா வாசுதேவனையே பாடவைத்து குரலுக்கும், கேரக்டருக்குமான ஒற்றுமையைப் பலப்படுத்தினார்.

படத்தில் எல்லாப் பாடல்களும் செம ஹிட்டாகின. கிராமத்துக் கமல் கொஞ்சம் சதை போட்டவராகவும், அமெரிக்க ரிட்டர்ன் இளைஞர் கமல் ஸ்லிம்மாகவும் இருந்ததெல்லாம் கமல் எனும் கலைஞன் செய்த மாயாஜாலம்.

‘இளமை இதோ இதோ...’ பாடல் ஒலிக்காத டீக்கடைகளே இல்லை அப்போது. ரேடியோவில் இந்தப் பாடலை போட்டுக்கொண்டே இருப்பார்கள். கமலின் ரசிகர்களுக்கு இது கமலைப் புகழும் பாடலாக அமைந்ததில் இரட்டிப்பு கொண்டாட்டம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வொரு டிசம்பர் 31-ம் தேதியன்றும், ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப்புத்தாண்டு நாளிலும், தொலைக்காட்சிகளில் இந்தப் பாடலை ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறார்கள் இன்னமும்.

எண்பதுகளிலும், தொன்னூறுகளிலும் நாம் ஏதொவொரு படம் பார்க்கச் சென்றிருப்போம். அப்போது இரவுக்காட்சியின் போது சரியாக 12 மணியாகும் வேளையில், சட்டென்று படத்தை நிறுத்துவார்கள். ‘சகலகலா வல்லவன்’ படத்தின் ‘விஷ் யூ ஹேப்பி நியூ இயர்’ என்று பைக் ஓட்டிக்கொண்டு கமல் வருவதும் நடனமாடுவதும் ‘நான் தான் சகலகலா வல்லவன்’ என்றுமாகப் பாடல் ஓடும். முடிந்ததும் அருகில் இருப்பவர்கள், ‘ஹேப்பி நியூ இயர்’ என்று குரலெழுப்பிக் கொண்டாடுவார்கள். மகிழ்வார்கள். பிறகு பார்க்கவந்த படத்தை, ஓடிக்கொண்டிருந்த படத்தை மீண்டும் திரையிடுவார்கள்.

1982 ஆகஸ்ட் 14-ம் தேதி படம் வெளியானது. 1983-ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு தொடங்கிய நாளில், 1982-ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதி, எங்கு பார்த்தாலும் ‘விஷ் யூ ஹேப்பி நியூ இயர்’ என்று ஒலித்து, நமக்குள் ஏதோவொருவித புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் தந்துகொண்டே இருக்கிறது இந்தப் பாடல்!

இது 2022ம் ஆண்டின் டிசம்பர் 31. கிட்டத்தட்ட கமல், இளையராஜா, வாலி, ஏவி.எம்., எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலானோரின் கூட்டு முயற்சியில், முக்கியமாக கமல் - இளையராஜாவின் கூட்டணியில் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று சகலகலாவல்லவர்களான இவர்களின் பாடலால் பாடியும் கேட்டும் ஒவ்வொரு புத்தாண்டையும் வரவேற்றுக் கொண்டே இருக்கிறோம்!

எல்லோருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லி வாழ்த்துவோம். அதேபோல், கமல் - இளையராஜா மற்றும் ‘சகலகலா வல்லவன்’ குழுவினருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லி வாழ்த்துவோம்!

SCROLL FOR NEXT