சினிமா

‘நல்லவனுக்கு நல்லவன்’ ரஜினி... எப்போதுமே!

வி.ராம்ஜி

ரவுடியைக் காதலிப்பதுதான் இன்றைக்கு சினிமாவில் டிரெண்ட். கத்தியுடனும் பரட்டைத்தலையும் தாடியுமாகவும் எட்டுப்பத்துப் பேரை தெருவில் விளாசித் தள்ளுபவரை, உருகி உருகிக் காதலிக்கும் கதைகளே இங்கே அதிகமாகிவிட்டன. ஆனால் ரவுடியாக இருந்தவனைக் கல்யாணம் செய்துகொண்டு, அவனுடைய நல்ல குணங்களை அவனுக்கே உணர்த்தி, அவனை ‘நல்லவனுக்கு நல்லவன்’ என்று ஊரே சொல்லும்படி மனைவியானவள் மாற்றிக் காட்டினால் எப்படியிருக்கும்? ’நல்லவனுக்கு நல்லவன்’ படம் மாதிரி இருக்கும்!

ஏவி.எம் தயாரித்த படம். அப்புறமென்ன... எஸ்.பி.முத்துராமன் இயக்கம். ரஜினி, ராதிகா, கார்த்திக், துளசி, வி.கே.ராமசாமி, விசு, ஒய்.ஜி.மகேந்திரன் முதலானோரின் நடிப்பில் வெளியானது ‘நல்லவனுக்கு நல்லவன்’.

அடிதடி, அடியாள், கெட்டதைத் துணிச்சலுடன் செய்யும் குணம், நல்லதைச் செய்கிற மனசு என்று இருக்கிறான் நாயகன். உறவென்று யாருமில்லை. தன் இஷ்டத்துக்கும் வாழ்க்கையை அதன் போக்கிற்குமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவனிடம் அடைக்கலம் தேடி வரும் சூழல் நாயகிக்கு!

பின்னர், அவளின் வீடுவாசலை அறிந்து, உறவுகளிடம் சேர்க்கிறான். ஆனால் உறவுகளின் மோசமான குணங்கள் தெரியவர, மீண்டும் அழைத்துச் செல்கிறான், வீட்டுக்கு. போலீஸ் உதவியுடன், உறவுக்கூட்டம் வந்து நாயகியை அனுப்பச் சொல்லிக் கேட்கிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள அங்கே முடிவு செய்கிறார்கள். திருமணம் நடக்கிறது.

அவனின் அடாவடித்தனத்தையும் ரவுடித்தனத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்துகிறாள் மனைவி. நாயகனின் மீது அக்கறை கொண்ட போலீஸ் அதிகாரி, மிகப்பெரிய தொழிற்கூடம் வைத்திருக்கும் செல்வந்தரிடம் சிபாரிசு செய்கிறார். நாயகனை அவருக்குப் பிடித்துவிடுகிறது. வாழ்வில், மெல்ல மெல்ல உயருகிறான் நாயகன். ஒருகட்டத்தில், சொத்துகளையும் தொழிற்சாலையையும் நாயகனிடம் ஒப்படைக்கிறார். இதைக் கண்டு, முதலாளியின் உறவுக்கூட்டம் ஆவேசமாகிறது.

தொழிற்சாலைக்கு முதலாளியாகிறார் நாயகன். நல்லவன் என்று பேரெடுக்கிறார். அவர்களுக்கு ஒரு மகள். ஒரிஜினல் முதலாளியின் மகன், நாயகனின் மகளைக் காதலிக்கிறார். குடி, கூத்து என்று இருக்கிற முதலாளியின் மகனைத் திருமணம் செய்துகொள்ளாதே என்று தடுக்கிறார். ஆனால், வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கிறார் மகள். .

மகளின் செயலால் மனமுடைந்த நாயகி, இறந்துவிடுகிறார். தனிமரமாக நிற்கிறார் நாயகன், சொத்துகளையெல்லாம் ஒரிஜினல் முதலாளியின் மகனுக்கே கொடுத்துவிடுகிறார். அங்கே பார்த்தால், சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சியே நடக்கிறது. மகளையும் மருமகனையும் காப்பாற்றுகிறார் நாயகன்.

படம் முழுக்க ரஜினிகாந்தின் ராஜ்ஜியம்தான். ரவுடியாக இருக்கும்போது ஸ்டைல் என்ன... ஆக்‌ஷன் என்ன... அலப்பறைகள் என்ன! அமர்க்களப்படுத்துவார் ரஜினி. மனைவி ராதிகாவிடம் சரணடையும் போது, ரஜினிக்குள் இருக்கும் அப்பாவித்தனமும் வெள்ளந்தி மனசும் வெளிப்படும். போலீஸ் அதிகாரி மேஜர் சுந்தர்ராஜனிடம் மரியாதையுடனும் முதலாளி விசுவிடம் விசுவாசத்துடனும் என கேரக்டரை நன்கு உணர்ந்து பிரமாதப்படுத்தியிருப்பார்.

ரஜினியின் மனைவியாக ராதிகா. அவரின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. ரஜினியிடம் கெஞ்சுவார். கொஞ்சுவார். அதட்டுவார். மிரட்டுவார். ஒருகட்டத்தில், உடைந்து கதறுவார். கணவனை நல்லவனாக்குவதற்கு ராதிகா எடுக்கும் முயற்சிகளிலெல்லாம் அவரின் பண்பட்ட நடிப்பு பரிணாமம் எடுத்துக்கொண்டே இருக்கும்.

வழக்கம் போல் மேஜர் மிடுக்காக நடித்திருப்பார். விசு கலகலக்கச் செய்வார். விசுவின் வசனங்கள் பல இடங்களில் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டே இருக்கும். துறுதுறுவென இருக்கும் கார்த்திக்கின் நடிப்பும் பிரமாதம். ’சகலகலாவல்லவன்’ படத்தில் கமலுக்குத் தங்கையாக அறிமுகமான துளசி, இதில் ரஜினிக்கு மகளாக அழகுடனும் நடிப்புடனும் மின்னியிருப்பார்.

மனைவியிடம் மரியாதையும் மகளிடம் அன்பும் காட்டுகிற இடங்கிளிலெல்லாம் ரஜினியின் வித்தியாசமான மேனரிஸத்தையும் ஸ்டைலையும் பார்க்கலாம். ’‘உங்க அம்மாவுக்குத் தெரியாம உன் லவ்வரோட சினிமாவுக்கு அனுப்பறேன். ஜாலியா... அதேசமயம் ஜா....க்கிரதையா வரணும்டா’’ என்பார். மகளின் காதலுக்கு உதவிசெய்துவிட்டு, மனைவி ராதிகாவிடம் மாட்டிக்கொள்ளும் இடத்தில் அசடு வழியும் காமெடி ரஜினியையும் நிறைய இடங்களில் பார்க்கலாம்.

மருமகன் மாட்டிக்கொண்டுவிட்டான், ஆபத்து என்று தகவல் தெரியும்போது, ஆவேசத்துடன் நடந்து வருவார் வயதான ரஜினி. அப்போது பழைய ரவுடி ரஜினி, இந்த ரஜினி, பழைய ரஜினி, இந்த ரஜினி என்று கட் ஷாட்டுகள் வைக்க... தியேட்டரில் விசில் பறக்கும்.

ரஜினி வீட்டு பங்களா பிரம்மாண்டம். செட் போட்டிருப்பதைச் சொன்னால்தான் தெரியும். படத்தின் சண்டைக்காட்சிகள் அதகளம் பண்ணும். ‘யாரையும் அடிக்கக்கூடாது’ என்று ரஜினியிடம் ராதிகா சத்தியம் வாங்கியிருப்பதால், அடியை வாங்கிக்கொண்டு திருப்பி அடிக்காமல் வந்திருப்பார். ’’யாரையும் கைநீட்டி அடிக்கக்கூடாதுன்னுதான் சொன்னேன். அடி வாங்கிட்டு வாங்கன்னு சொல்லலை’’ என்று சொல்லி அடிக்க அனுப்புவார் ராதிகா. அந்த ஹீரோயிஸக் காட்சி, ரஜினியிஸக் காட்சி. மகள் வீட்டைவிட்டு போய்விட்டதும் கலங்குமிடம், ராதிகா இறந்ததும் ரஜினி துவளும் காட்சி என ரஜினியின் கதாபாத்திரத் தன்மையை உணர்ந்து அந்தக் காட்சிகளை வைத்திருப்பார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

பாடல்கள் அனைத்தையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் இளையராஜா. வெஸ்டர்ன் ப்ளஸ் டப்பாங்குத்து கலந்து ‘வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’ பாடலும் படமாக்கிய விதமும் அபாரம். இந்தப் பாடலை ஜேசுதாஸிற்குக் கொடுத்திருப்பார். ‘உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே’ என்ற பாடலை ஜேசுதாஸும் சுனந்தாவும் பாடியிருப்பார்கள். படத்தின் மிகப்பெரிய ஹிட்டான பாடல் இது. வைரமுத்துவின் வரிகளும் நம்மை ஈர்த்துவிடும். பின்னர், இந்தப் பாடலின் நான்கு வரிகள், ராதிகா இறந்ததும் பேத்தாஸ் பாடலாக வரும். இரண்டுமே நம் உள்ளம் உசுப்பிவிடுகிற பாடல்கள்தான்.

கார்த்திக், துளசிக்கு ‘முத்தாடுதே முத்தாடுதே’ பாடல் அழகான டூயட். தொழிலாளர்கள் கூடியிருக்கும் விழாவில், ‘நம்ம முதலாளி நல்ல முதலாளி’ என்ற பாடலும் ஹிட்டடித்தது. மகள் வீட்டைவிட்டுப் போய் திருமணம் செய்துகொண்டதும் ஒலிக்கும் ‘சிட்டுக்கு செல்லச்சிட்டுக்கு’ பாடல் மனதைக் கனக்கச் செய்துவிடும். வீட்டில் இப்படி காதலுக்காக வெளியேறியவர்களை நினைத்தும் நம் வீட்டில் இப்படி ஆகிவிடக்கூடாதே... என்றும் காட்சியில் ஒன்றிப் போய் ரசிகர்கள் அழுதார்கள்.

ரஜினியின் மிகப் பிரம்மாண்ட வெற்றிப் படங்களின் வரிசையில் ‘நல்லவனுக்கு நல்லவன்’ தனியிடம் பிடிக்கிறான். ஏவி.எம், ரஜினி, இளையராஜா, எஸ்.பி.முத்துராமன் முதலானோரின் கூட்டணியில் வந்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ 1984 அக்டோபர் 22-ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்தது. வெளியாகி இன்றுடன் 38 ஆண்டுகளாகின்றன. சில ஊர்களில் வெள்ளிவிழா எனப்படும் 175 நாட்களைக் கடந்து ஓடியது. பல ஊர்களில், 100 நாட்களைக் கடந்து ஓடியது. வசூலையும் அள்ளினான்... ரசிக மனங்களையும் அள்ளினான் ‘நல்லவனுக்கு நல்லவன்’.

SCROLL FOR NEXT