’நம்மவர்’ கமல்
’நம்மவர்’ கமல் 
சினிமா

கமலுக்கு ‘நம்மவர்’ பட்டம் கொடுத்த படம்!

வி.ராம்ஜி

எண்பதுகளில் ’காதல் இளவரசன்’ என்று கமலுக்கு பட்டம் கொடுத்தார்கள். பிறகு ’நவரச நாயகன்’ என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியால் கமலுக்கு ’கலைஞானி’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் ‘உலகநாயகன்’ என்கிற பட்டத்தை வழங்கினார். இது திரையுலகில் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதேசமயம் அவரின் அரசியல் பயணத்தில் இன்னொரு பெயரைச் சொல்லித்தான் அவரின் தொண்டர்கள் அவரை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அது - ‘நம்மவர்’!

கமல்ஹாசன் நடிப்பில் சந்தமாமா விஜயா கம்பைன்ஸ் தயாரிப்பில் பிரபல இயக்குநர் சேதுமாதவன் இயக்கத்தில் உருவானதுதான் ‘நம்மவர்’ திரைப்படம்.

தமிழ் சினிமாவில் கல்லூரியைக் கதைக்களமாகக் கொண்ட கதைகள், ஏராளமாகவே இருக்கின்றன. அப்படிக் கல்லூரியைக் காட்டினால் காதல் இருக்கும். இல்லையெனில் இரண்டு மாணவர்களுக்கிடையே மோதல் இருக்கும். ஆனால் இங்கே பேராசியருக்கும் மாணவனுக்கும் இடையே நடக்கிற யுத்தம்தான் ’நம்மவர்’ கதையின் மையப்புள்ளி.

’நம்மவர்’ கமல்

அந்தக் கல்லூரிக்குப் பேராசிரியராகவும் துணை முதல்வராகவும் வருகிறார் செல்வம் (கமல்). அங்கே உள்ள மூத்த பேராசிரியர் ராவ் (நாகேஷ்). சொல்லப்போனால் செல்வம் படித்த காலத்தில், அவருக்குப் பேராசிரியராக இருந்தவர். ராவின் மகள் நிர்மலாவும் (டான்ஸ் மஸ்டர் பிருந்தா) அதே கல்லூரியில் படிக்கிறார்.

இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ரமேஷ்(கரண்). பண பலமும் படை பலமும் மிக்க மிகப்பெரிய மனிதரின் மகன். கல்லூரிக்கு வந்து அவர் செய்யும் அடாவடிகளுக்கு அளவே இல்லை. சொல்லப்போனால், அடாவடிகளை அரங்கேற்றுவதற்காகவே கல்லூரிக்கு வரும் மாணவர் ரமேஷ்.

வெறும் வம்புதும்பும் அடாவடிகளும்தானா என்றால் கூட பொறுத்துக்கொள்ளலாம். போதைப்பொருள் உட்கொள்வது, உடன் ஏழெட்டு நண்பர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கும் பழக்கப்படுத்துவது, போதாக்குறைக்கு, நன்றாகப் படிப்பவர்களையும் கூச்ச சுபாவத்துடன் ஒதுங்குகிறவர்களையும் கூட விட்டுவைக்காமல் அவர்களைத் துன்புறுத்துவது என்றெல்லாம் ரமேஷ் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

மாணவர்களுக்கான தேர்தல். அந்தத் தேர்தலில் மாணவி நிர்மலா ஜெயித்துவிடுகிறார். ரமேஷ் தோற்றுவிடுகிறார். அந்த ஆத்திரத்தில் அப்பாவுக்கு போன் செய்து ஆட்களை அனுப்பச் சொல்கிறார். அந்த ஆட்கள் வந்து கல்லூரிக்கு பாட்டில் வீசுகிறார்கள். பெட்ரோல் பாட்டில் வீசுகிறார்கள். உடைத்து நொறுக்குகிறார்கள். இந்த களேபரங்களின் போதுதான், பேராசிரியர் செல்வம் அங்கே வருகிறார்.

கல்லூரியின் சூழலைப் புரிந்துகொள்கிறார். அன்பும் பரிவும் பிரியமும் நேசமும் இல்லாமல் ரமேஷ் இந்த முரட்டுக்குணத்துக்கு ஆளாகியிருப்பதைத் தெரிந்துகொள்கிறார். சக பேராசிரியரான வசந்தியிடம் (கவுதமி) பேசுகிறார். மூத்த பேராசிரியருக்கு உரிய மரியாதை அளித்து அவருடன் உறவாடுகிறார். மாணவர்களிடம் நண்பனைப் போல் இனிமையாகப் பழகுகிறார். ஆனால் ரமேஷ் மட்டும் ஒட்டுமொத்தமாக வெறுக்கிறார்.

ரமேஷின் கூட்டத்தில் உள்ளவர்களைக் கொஞ்சம்கொஞ்சமாகத் திருத்துகிறார் செல்வம். அவர்களின் பெற்றோரிடம் மகன்களின் நிலையைச் சொல்லி அன்புடன் நடந்துகொள்ளும்படி வலியுறுத்துகிறார். ரமேஷ், தன்னைத்தானே அடித்துக் கொண்டும், இடித்துக்கொண்டும் காயப்படுத்திக்கொண்டு, ‘பேராசிரியர் செல்வம் அடித்துவிட்டார்’ என்று பொய்க் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் அவரைத் திருத்தும் முயற்சியில் இறங்குகிறார் செல்வம்.

இதனிடையே வசந்திக்கு செல்வம் மீது காதல் வருகிறது. ஆனால் அந்தக் காதலைப் புறக்கணிக்கிறார். மாணவன் ஒருவன் ரத்தமில்லாமல் உயிருக்குப் போராடுகிறான். செல்வம் அதே குரூப் ரத்தம்தான். ஆனால் வேறு எவருக்கோ போன் செய்து ரத்தம் கொடுக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவுகிறார். இதை அறிந்த வசந்தி செல்வத்தைத் தவறாகப் புரிந்துகொள்கிறார். பின்னர்தான் தெரியவருகிறது... செல்வத்துக்குப் புற்றுநோய் இருக்கும் விஷயம்!

செல்வம் வீட்டின் வேலையாள் பெருமாளாக நடிகர் செந்தில். கமலின் அக்காவாக ஸ்ரீவித்யா. கல்லூரி கேன்டீன் முதலாளியாக டெல்லி கணேஷ். மாணவர் ரமேஷின் அப்பாவாக சேதுவிநாயகம்.

’நம்மவர்’ கமல், கரண்

இறுதியில், ரமேஷுடன் நேரடியாகவே மோதிக்கொள்ளும்படியான நிலை வரும் செல்வத்துக்கு. அதேசமயம், தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், தன்னிடம் படிக்கும் மாணவனைத் திருத்த வேறு வழியில்லை எனும் நோக்கத்துடனும்தான் அடிப்பார். பிறகு சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார் என்பதுடன் படம் நிறைவடையும்.

மூக்குக் கண்ணாடி. லேசான தாடி என்று கமல் புது ஸ்டைலுடன் இருப்பார் இந்தப் படத்தில். கவுதமிக்கு பொறுப்பான, அழகான வேடம். அற்புதமாகச் செய்திருப்பார். கரணின் நடிப்பு மிரட்டலாக இருக்கும். அவரது பார்வையும் வெறித்தனமான சிரிப்பும் படம் பார்க்கிற நம்மையே பயமுறுத்தும்.

டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரி பிருந்தாவும் டான்ஸ் மாஸ்டர்தான். நாகேஷின் மகள் நிர்மலாவாக நடிப்பில் கலக்கியெடுத்திருப்பார் பிருந்தா. அவருக்கு நேர்கிற கொடுமை... மறுநாள் காலையில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் சோகம்... படம் பார்ப்பவர்கள் தங்கள் வீட்டு மகள்களை, மகன்களை, தனக்குத் தெரிந்த கல்லூரி மாணவ மாணவிகளை அங்கே பொருத்திப் பார்த்துக்கொண்டு துக்கப்பட்டார்கள்.

’நம்மவர்’ கமல், நாகேஷ்

மகளுக்காக டிபன் வாங்க நாகேஷ் வருவார். கமலைச் சந்திப்பார். அப்போதுதான் பிருந்தாவின் தற்கொலைச் செய்தி தெரியவரும். அந்த நொடியில் இருந்து அடுத்த பத்து நிமிடத்துக்கு நாகேஷின் நடிப்பு ராஜாங்கம்தான். நம்மையெல்லாம் ஏராளமான படங்களில் சிரிக்கவைத்த நாகேஷ், இந்தப் படத்தில் தன் நடிப்பால் நம்மைக் கண்ணீர்விட வைத்திருப்பார். மகளைப் பறிகொடுத்த வயது முதிர்ந்த தந்தையையும் அவரின் புலம்பல்களையும் உடல் மயக்கத்தில் இருப்பதையும் அழுவதையும் என... ‘இந்தக் கேரக்டரை நாகேஷைத் தவிர யாருமே பண்ண முடியாதுய்யா’ என்று நம்மையெல்லாம் சொல்லவைத்தது. நாகேஷின் நடிப்புக்காகவே இந்தப் படத்தை இரண்டாவது மூன்றாவது முறை பார்த்தவர்களெல்லாம்கூட உண்டு. நாகேஷின் ஆகச்சிறந்த நடிப்புக்காக, அந்த வருடம் சிறந்து துணை நடிகர் எனும் தேசிய விருது நாகேஷுக்குக் கிடைத்தது. அதேபோல் கமலின் அருமையான நடிப்பை ஒவ்வொரு காட்சியிலும் உணரலாம்.

கமலுக்கும் செந்திலுக்குமான உறவு, கமலுக்கும் ஸ்ரீவித்யாவுக்குமான பந்தம், கமலுக்கும் நாகேஷுக்குமான பாசம், கமலுக்கும் கவுதமிக்கான பிரியம், கமலுக்கும் மாணவர்களுக்குமான ஸ்நேகம், அடியாட்களிடம் கமல் காட்டும் ஆவேசம், அத்தனை ஆவேசத்தையும் அடக்கிக்கொண்டு கரணை ஒவ்வொரு தருணத்தில் ‘டீல்’ செய்கிற பொறுமை என்று பேராசிரியர் செல்வமாகவே வாழ்ந்திருப்பார் கமல். தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது கமலுக்கு!

மலையாளத்தில் கமலை வைத்துப் பல படங்கள் இயக்கிய மிகச்சிறந்த இயக்குநர் சேதுமாதவன் ’நம்மவர்’ படத்தை இயக்கினார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்தார். கவியரசர் கண்ணதாசனின் மகன்களில் ஒருவரான கண்மணி சுப்பு படத்துக்கு வசனம் எழுதினார். தனது நண்பரான மகேஷை இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் கமல். தன் ‘குருதிப்புனல்’ படத்திலும் மகேஷைப் பயன்படுத்திக்கொண்டார். இசையில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்திருக்கவேண்டிய இசையமைப்பாளர் மகேஷ், புற்றுநோயால் சீக்கிரமே இறந்துபோனார் என்பது பெருஞ்சோகம்!

படத்தின் அனைத்துப் பாடல்களையும் மிகப்பெரிய ஹிட்டாக்கிக் கொடுத்தார் மகேஷ். பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸையும் மகேஷ் அறிமுகப்படுத்தினார். ’சொர்க்கம் என்பது நமக்கு/ சுத்தம் உள்ள வீடுதான்/ சுத்தம் என்பதை மறந்தால்/ நாடும் குப்பைமேடுதான்/ உலாவும் நிலாவில் வெள்ளை அடிக்கலாம்/ எங்கேயும் எப்போதும் சுத்தப்படுத்தலாம்/

/குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்/ படிக்கும் மனத்தில்/ என்ன ஆசைகள்/ இதற்கா இதற்கா கல்வி கற்கும் சாலைகள்/ எதற்கோ எதற்கோ இந்த வேலைகள்/ மீதியாக வந்த பக்கம் போதை ஏற மாத்திரை/

படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்/ ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்/ உனக்கும் எனக்கும் ஆடு மாடு தேவல/உனை போல் எனை போல் கெட்டு போகல/ நல்ல வார்த்தை கூட இப்போ கெட்ட வார்த்தை ஆனது/ என்ற பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதினார். ஸ்ரீநிவாஸ், சொர்ணலதா பாடியிருப்பார்கள். இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதேபோல், ’உடையோடு பிறக்கவில்லை’ என்றொரு பாடல். எஸ்பிபி-யும் சுஜாதாவும் பாடினார்கள். ’எதிலும் வாழ்வாண்டா’ என்ற பாடலை எஸ்பிபி-யுடன் கமலும் பாடியிருந்தார். எஸ்பிபி - சித்ரா இணைந்து பாடிய ’பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்’ என்ற பாடல் அழகிய மெலடியாக இனித்தது. பாடலின் காட்சிகளும் ஆரம்பமும் கவிதை மாதிரி இருந்தது. எல்லா மொழிகளும் கலந்த பாடலையும் தீம் மியூஸிக்கையும் பிரமாதப்படுத்தியிருப்பார் மகேஷ்.

1994 நவம்பர் 2-ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளியானார் ‘நம்மவர்’. படம் பார்த்துவிட்டு, கமலின் நடிப்பையும் நாகேஷின் நடிப்பையும் பலரும் பாராட்டினார்கள். 1992-ல் வெளியான ‘தலைவாசல்’ படமும் கிட்டத்தட்ட இதே சப்ஜெக்ட் என்பதால் அந்தப் படத்துடன் ஒப்பிட்டார்கள். ‘அது அப்போ வரலைன்னா, ‘நம்மவர்’ இன்னும் சூப்பரா ஓடிருக்கும்’ என்றார்கள். படத்துக்கு மிகப்பெரிய பாராட்டெல்லாம் கிடைத்தது. இன்றைக்கு டிவியில் திரையிட்டாலும் விட்டுவிடாமல் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அன்றைக்கு ‘நம்மவர்’ பெரிய கலெக்‌ஷன் கொடுக்கவில்லை. அதேசமயம், நஷ்டத்தையும் தரவில்லை.

இந்தப் படத்தின் தாக்கம் ஏதொவொரு வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இருந்திருக்கிறது. அந்தத் தாக்கத்தில்தான் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ எடுத்திருப்பார் போல... என்று நானும் நினைத்தேன். பலரும் பேசிக்கொண்டார்கள். பத்திரிகைகளில், விமர்சனங்களில்கூட இதைக் குறிப்பிட்டார்கள்.

படம் வெளியாகி 28 ஆண்டுகளானாலும் பேராசிரியராக ஸ்டைல் காட்டிய ‘நம்மவர்’ கமலையும் நாகேஷின் உணர்ச்சிபூர்வமான நடிப்பையும் மறக்கவே முடியாது நம்மால்!

SCROLL FOR NEXT