கைது செய்யப்பட்டவர்கள். 
சினிமா

நடிகர் கமல் சினிமா தயாரிப்பு நிறுவனம் பெயரில் 3000 பேரிடம் பணமோசடி... 2 பேர் கைது

காமதேனு

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் பெயரில் நடிகர், நடிகைகள் தேவை என போலி விளம்பரம் செய்து 10 லட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்

நடிகர் கமலஹாசன் கடந்த 43 ஆண்டுகளாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பெயரில் சினிமா பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் 'விக்ரம்', 'கடாரம் கொண்டான்', 'விஸ்வரூபம்', 'நளதமயந்தி', 'விருமாண்டி' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. தற்போது இந்நிறுவனம் நடிகர்கள் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் வைத்து படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.ஜூலை

நடிகர் கமல்ஹாசன்

இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை, ஆர்வமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் செய்தனர். விண்ணப்பிக்கும் இளம் பெண்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கூகுள் பே மூலம் பணத்தை அனுப்ப வேண்டுமென சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்து பணமோசடியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் அர்ஜூனர் கடந்த ஜூலை மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், இந்த மோசடியில் சிக்கி ஆகாஷ் என்ற நபர் 42 ஆயிரம் ரூபாய் இழந்து உள்ளதாகவும், அவர் பட நிறுவனத்தில் வந்து கேட்டபோது, தான் தங்களுக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.

கைது

இப்புகாரில் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி கணக்கை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இவ்வழக்கில் தொடர்புடைய இருவரை சைபர் க்ரைம் போலீஸார் இன்று கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர்கள் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த புகழேந்தி என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுதாகர் பிளஸ் 2 படித்து விட்டு ஆன்லைன் டிரேடிங்கில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. பின்னர் சொந்தமாக விருதாச்சலத்தில் அலுவலகம் தொடங்கி பல வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி ஆன்லைன் டிரேடிங் மார்க்கெட்டிங் வகுப்புகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவரது ஆலோசனையின் பேரில் ஒரு சில முதலீட்டாளர்கள் அதிக லாபம் அடைந்ததால் நானும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பல்வேறு விளம்பரங்கள் வெளியிட்டுள்ளார்.

அதில் எந்த வருமானமும் கிடைக்காததால் வாட்ஸ் அப்பில் குழுவில் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்று வரும் விளம்பரங்களைச் சேகரித்து அதை வாட்ஸ் அப் குழு மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் சுதாகர் சுமார் 3000 பேரிடம் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளதும் இவருக்கு உதவியாளராக புகழேந்தி செயல்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT