துப்ரவ்கா உக்ரேசிச்
துப்ரவ்கா உக்ரேசிச் 
வலைப்பூ

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கா?

முனைவர் து.ரவிக்குமார் எம்.பி.,

2021-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்லப் போகிறவர் யார் என்பதை, நாளை (அக்-08) அறிவிக்க இருக்கிறார்கள். இதற்கிடையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நோபல் பரிசு இவர்களில் யாரேனும் ஒருவருக்கு கிடைக்கக்கூடும் என்று 6 எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதில் ஒரு பெயரைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்து நான் வெளியிட்டு இருக்கிறேன். யுகோஸ்லாவியா நாட்டைச் சேர்ந்த துப்ரவ்கா உக்ரேசிச் (Dubravka Ugresic ) என்ற அந்த எழுத்தாளரின் ஒரு சிறுகதையை ‘பிழைப்பு’ என்ற தலைப்பில் நான் மொழி பெயர்த்திருந்தேன்.

‘குரேஷியாவில் பிழைப்பு என்ற சொல் வாழ்க்கை என்ற சொல்லைப் பதிலீடு செய்துவிட்டது. நாம் எப்படியோ பிழைப்பு நடத்தினால் சரி. முக்கியமான விஷயம் நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதுதான்’ என்று அந்தச் சிறுகதையில் அவர் எழுதி இருப்பார். நமது நிலையும் அப்படித்தான் இருக்கிறது.

“நான் பிழைப்பு நடத்துவது எனத் தீர்மானித்து விட்டேன். மிகவும் ஜனநாயகபூர்வமான ஆட்சி நடக்கும் இந்த நாட்டில் சுதந்திரமாக சிந்திக்கும் திமிர் பிடித்த நபர்கள் பொது இடங்களில் அடித்துக் கொல்லப்படுவதை நான் பார்த்தேன். டெலிவிஷன் அத்தகைய காட்சிகளை ஒளிபரப்பி அதன் மூலம் அப்படியான கொலைகள் நடக்கும் கொலைக்களம் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் வரலாற்றுச் சின்னங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நான் அதனால் நிலைகுலைந்து போகவில்லை.

எதற்காக மனமுடைய வேண்டும்? நகரமே மண்ணோடு மண்ணாகும்போது சில வரலாற்றுச் சின்னங்களுக்காக ஏன் கவலைப்படவேண்டும்? எல்லாம் நல்லதுக்குத்தான். ஜனநாயகத்தில் இதெல்லாம் இயல்புதான். ஜனநாயக நாட்டில் மக்கள் சில வரலாற்றுச் சின்னங்களை நிர்மாணிக்கிறார்கள், தங்களுக்குப் பிடிக்காதவற்றை உடைத்து நொறுக்குகிறார்கள்” என்று அந்தக் கதையின் நாயகி தனக்குள் சொல்லிக்கொள்வாள். இதைப் படிக்கும்போது நாமே நமக்குள் சொல்லிக்கொள்வதுபோல் இருக்கிறதில்லையா?

“ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அருகிப் போய்விட்டதை எடுத்துக்காட்டும் இந்தச் சிறுகதை, இந்தியாவுக்கும் பொருந்தக்கூடியது தான்” என்று நான் அப்போது அந்தக் கதையைப்பற்றிய குறிப்பில் எழுதியிருந்தேன்.

நாளை, அவருக்கு நோபல் பரிசு கிடைக்கிறதோ இல்லையோ வாய்ப்பிருந்தால் ‘மாமிசம்’ என்ற எனது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் அவரது சிறுகதையை வாசித்துப் பாருங்கள்.

SCROLL FOR NEXT