சமூகம்
சமூகம் 
வலைப்பூ

எதெல்லாம் சுய ஒழுக்கம்? - வலைதளம் காட்டும் வகைப்பட்டியல்

காமதேனு

எது சுய ஒழுக்கம்... எது நாகரிகம்... எது பண்பாடு? என்பது குறித்து நம் அனைவருக்கும் தனித்தனி கருத்துகள் இருக்கலாம். நமக்கு சரியென்று படுவது இன்னொருவருக்கு தவறாகப் படலாம். நாம் நல்லது என்று கருதுவது மற்றவருக்கு அல்லாததாக அமைந்து விடலாம். ஆனால், தற்காலத்தில் அனைவருக்குமே பொதுவானதாக சிலவற்றை நாம் அறுதியிட்டு கூறலாம். அவை எவை என்பது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. யார் எழுதியது என்றோ... இப்படி பகிர்வது நாகரிகம் தானா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இதில் உள்ளவற்றை நாமும் பின்பற்றிப் பார்க்கலாமே...

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் அலைபேசியில் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என நிணைக்காதீர்கள். இது உங்கள் குணத்தை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், குடை போன்றவற்றையும் மனப்பூர்வமாகவே கொடுங்கள்.

3. ஹோட்டலில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், அங்குசென்று விலை அதிகமாக உள்ள உணவுகளை நீங்கள் சொல்லாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. இன்னும் கல்யாணம் ஆகலியா... குழந்தைகள் இல்லையா... இன்னும் சொந்தவீடு, கார் வாங்கலையா? என்பன போன்ற தர்மசங்கடமான கேள்விகளை யாரிடமும் எப்போதும் கேட்காதீர்கள். ஏனெனில் அவை நமது பிரச்சினைகள் இல்லை.

5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களையும் சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் வாடகை வாகனத்தில் சென்றால் முதல்முறை இயலாவிட்டால் மறுமுறையாவது நீங்கள் பணம் கொடுத்துவிடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும் அதை மவுனமாக கேட்டுக்கொள்ளுங்கள். அதை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது, கெட்டது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அதற்குப்பதிலாக அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.


10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கும்போது ஒருவரது குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.
"நீங்கள் பார்க்க நன்றாக, அழகாக இருக்கிறீர்கள்” என்று கூறுங்கள். உடல் எடையை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நீங்களாக எதையும் அறிவுரை வழங்காதீர்கள்.

13. யாராவது அலைபேசியில் உள்ள புகைப்படத்தைக் காட்ட அலைபேசியை கையில் கொடுத்தால் அதை மட்டும் பார்த்துவிட்டு திரும்பக் கொடுத்துவிடுங்கள். மாறாக கேலரிக்கு சென்று அடுத்தடுத்த புகைப்படங்களை பார்க்க முயலாதீர்கள்.

14. யாராவது மருத்துவரிடம் போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். தங்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று அவர்கள் கருதலாம். விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று மட்டும் நல்லவிதமாக கூறுங்கள்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது அலைபேசியை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர யாருக்கும் அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், நீங்கள் கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் அதை கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்ணைப் பார்த்துப் பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. வீட்டுக்கு உறவினரோ, நண்பரோ வரும்போது டிவி பார்த்துக் கொண்டிருந்தால் அதை அணைத்துவிட்டு வாசல்வரை வந்து அவர்களை வரவேற்று அழைத்துச் செல்லுங்கள். அதேபோல வாசல்வரை சென்று வழியனுப்புங்கள்.

21. வீட்டுக்கு வருகிறவர்களிடம் ஏதாவது சாப்பிடுகிறீர்களா? என்று கேட்காமல் குறைந்தபட்சம் தண்ணீராவது கொடுங்கள்.

22. பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும்போது லவுட் ஸ்பீக்கரில் வைத்து பேசுவதையோ, பாட்டுக் கேட்பதையோ தவிர்த்து விடுங்கள்.

ஓகே தானே, இதெல்லாவற்றையும் நம்மால் பின்பற்ற முடியும் தானே... முடிந்தவரை பின்பற்றுங்கள்.

SCROLL FOR NEXT