எலான் மஸ்க் 
இணைய உலகம்

ட்விட்டர் பயனர்கள் அதிர்ச்சி... இனி ட்வீட் செய்யவும் கட்டணம்... எலான் மஸ்க் புதிய அதிரடி!

காமதேனு

ட்விட்டர் சமூக வலைதளத்தில் ட்வீட், ரீட்வீட் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் அதன் பயனர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ட்விட்டர் சமூக வலைதளத்தை உலக கோடீஸ்வரரும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க் வாங்கியது முதலே, அங்கே அதிரடி மாற்றங்கள் அமலாகி வருகின்றன. நிர்வாக சீரமைப்பு, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பாதிக்கும் மேலான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியதோடு, பலவிதமான கட்டண நடைமுறைகளையும் அமல்படுத்தி டிவிட்டர் பயனர்களை மிரள வைத்தார்.

ட்விட்டர் / எக்ஸ் தளம்

அடுத்தபடியாக ட்விட்டரின் பெயரையே எக்ஸ் என மாற்றினார். இந்த வரிசையில் அடுத்த அதிரடி மாற்றமாக, ட்விட்டரில் ட்வீட் செய்வதற்கு கட்டண நடைமுறையை கொண்டுவந்திருக்கிறார். சொந்த பதிவுகளை ட்வீட் செய்வது, பிறர் பதிவுகளை ரீட்வீட் செய்வது, முக்கிய பதிவுகளை புக்மார்க் செய்வது உள்ளிட்ட அன்றாட ட்விட்டர் பயன்பாடுகளுக்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது. மேற்கண்டவற்றை மேற்கொள்ள ட்விட்டர் பயனர்கள் இனி ஆண்டுக்கு அமெரிக்க மதிப்பில் 1 டாலர் அல்லது அதற்கு இணையான தங்கள் நாட்டு தொகையை செலுத்த வேண்டும்.

சோதனை ஓட்டமாக இந்த நடைமுறை இன்று முதல் நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் நடைமுறைப்படுத்துகிறது. படிப்படியாக இதர நாடுகளுக்கும் அமல்படுத்திய பிறகு, ட்விட்டர் பயன்பாடுகளுக்கு ஏற்ப கவர்ச்சிகரமான கட்டண விகிதங்களை உயர்த்தி அமல்படுத்தவும் ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கட்டணம் செலுத்தாத ட்விட்டர் பயனர்கள், வெறுமனே ட்விட்டர் பக்கங்களை மேய மட்டுமே முடியும். அதனுடன் தங்கள் தேவை அல்லது விருப்பத்துக்கு ஏற்ப ஊடாட முடியாது.

கட்டண விதிப்பில் ட்விட்டர்

ட்விட்டரில் குவிந்திருக்கும் ஸ்பேம் மற்றும் பாட் கணக்குகளை வடிகட்டும் நோக்கோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் ட்விட்டர் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் மட்டுமே எலான் மஸ்க் இந்த கட்டண அதிரடியை அமல்படுத்துவதாக டிவிட்டரிலேயே அதன் பயனர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT