ஏஐ ராம் 
இணைய உலகம்

ஏஐ படைப்பில் ராமாயணம்... இணையத்தை தெறிக்க விடும் டிஜிட்டல் ரகளை

காமதேனு

ஏஐ உருவாக்கத்தில் எக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் ராமாயணம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆன்மிகம், நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றுக்கு அப்பாலும் ராமாயணம் என்ற இதிகாசம் சகல தலைமுறையினரையும் ஈர்த்து வருகிறது. கதாப்பாத்திரங்கள், நிலப்பரப்பு, மனிதர்களின் மனோபாவங்கள் ஆகியவற்றுடன் நேசம், பாசம், சாகசம் என ஒரு புனைவுக்கான முழு உள்ளடக்கத்துடன், அனைத்து வயதினரையும் ராமாயணம் கவர்ந்துள்ளது. 80களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ராமாயணம், இன்றைய ஓடிடி தளங்கள் வரை வீச்சு குறையாதிருக்கிறது.

ஏஐ சீதை

ஆனபோதும், இளம் தலைமுறையினரை அவர்களின் ரசனையின் ஊடாக ஈர்ப்பதில் நவீன தொழில்நுட்பங்கள் அவசியமாகின்றன. செயற்கை நுண்ணறிவு சார்ந்த டீஃப் பேக் ரகளைகள் காலத்தில், ராமாயணம் போன்ற இதிகாசங்களுக்கும் ஏஐ பூச்சு தேவையாகிறது. ஏஐ படைப்புகளின் ராஜபாட்டையாக விளங்கும் சமூக ஊடகங்களில், சினிமா, விளையாட்டு, ஆபாசம் என இளசுகளுக்கான உருவாக்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றினூடே வெளிப்பட்டிருக்கும் ஏஐ ராமாயணம் தற்போது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

ஏஐ ராவணன்

நேற்று முன்தினம் அயோத்தியில் அரங்கேறிய ராமர் கோயில் குடமுழுக்கு விழா, ராமர், அயோத்தி மற்றும் ராமாயணத்தை மையமாகக் கொண்ட சமூக ஊடக நடவடிக்கைகளின் எழுச்சியைத் தூண்டியுள்ளது. நம்பிக்கையின் இதயப்பூர்வமான வெளிப்பாடுகள் முதல் வர்ணனைகள் மற்றும் காவியக் கதையின் ஆக்கப்பூர்வமான விளக்கங்கள் வரை, இந்த தருணத்தில் மக்கள் தங்கள் தனித்துவமான அனுபவங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அப்படியான இணையவாசிகளின் பகிர்வுகளுக்கு மத்தியில் மாதவ் கோலி என்பவரின் ஏஐ உருவாக்கத்திலான சுருக்கமான ராமாயணம் கவனம் பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு ஆக்கத்தில் உருவான கண்கவர் படங்களின் அடிப்படையில், 60 பதிவுகளில் முழு ராமாயணத்தையும் அவர் வலையேற்றி உள்ளார். படங்கள் மட்டுமன்றி அவற்றை ஒட்டிய சுருக்கமான மற்றும் பொருத்தமான விவரணைகளும் கவனம் ஈர்த்துள்ளன. ஏஐ படங்களில் தெறிக்கும் டிஜிட்டல் துடிப்பும், நுணுக்கமும் இளம் வயதினரை அதிகம் ஈர்த்துள்ளது. புராதனம் கெடாதும், புதிய தலைமுறையினரின் ரசனைக்கு பழுதின்றியும் மாதவ் கோலி தனது படைப்புகளை படையலிட்டுள்ளார். அயோத்தி குடமுழுக்கு தருணத்தை ஒட்டி வெளியான, இந்த ஏஐ ராமாயணம் அதற்குள் 15 லட்சம் பார்வையாளர்களை சேர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT