போராட்டக் களத்தில் பெண்கள்
போராட்டக் களத்தில் பெண்கள் 
உழவு

கிரானைட் குவாரி அமைக்க எதிர்ப்பு... மதுரை அருகே வெடித்தது போராட்டம்... வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற முடிவு!

காமதேனு

மதுரை மாவட்டம் சேக்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அப்பகுதியில் அமையவுள்ள கிரானைட் குவாரிக்கான ஏலத்தை தடை செய்ய வலியுறுத்தி நேற்று (அக்.26) முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை உள்ளிட்ட கிராமங்களில் மூன்று கிரானைட் குவாரிகள்  நடத்த வரும் 31-ம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகம் பொது ஏலம் விடுத்து டெண்டர் கோர உள்ளது.  இந்த நிலையில் விவசாயத்தை அழித்து கிரானைட் குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என சேக்கிபட்டி ஊர் மந்தையில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று முதல்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாறைகளைப் பாதுகாக்க தொடரும் இப்போராட்டத்தில் நேற்று இரவு பெண்கள் களத்திலேயே படுத்துறங்கினர். நல்ல முடிவு கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தை தொடர சேக்கிப்பட்டி பெண்கள் உறுதியேற்றுள்ளனர்.  கிரானைட் குவாரிக்கு எதிராக பொதுமக்கள் இன்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

நள்ளிரவிலும் நடந்த போராட்டம்

அதையடுத்து மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை, மதுரை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கிரானைட் குவாரிக்கு  அனுமதி  அளிக்கக்கூடாது என ஏற்கெனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்காமல் தற்போதே  தீர்வு தேவை என கூறி மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

கும்மிப் பாட்டுகளை பாடிக்கொண்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 வது நாளான இன்று மந்தையம்மன்  கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். விரைவில் கிரானைட் குவாரி டெண்டர் ரத்து செய்யப்படாவிட்டால் அடுத்தகட்டமாக வீடுகளில் கருப்புக் கொடி கட்டுவது, ரேஷன் அட்டைகளைத் திருப்பி ஒப்படைத்தல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT