உலக உணவு தினம் 
நல் உணவு

இன்று உலக உணவு தினம்... பசியாற்றி உண்போம்; சத்தானவற்றுக்கு முன்னுரிமை தருவோம்!

காமதேனு

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உடல் இளைப்பது, தொப்பையை கரைப்பது, உணவின் பெயரிலான உபத்திரவங்களை தவிர்ப்பது, ருசிக்கு அப்பால் பசிக்காக மட்டுமே உண்பது... என்பது குறித்தெல்லாம் உலகெங்கும் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்த விழிப்புணர்வுக்கு இன்னொரு வழியமைத்துத் தருகிறது, அக்டோபர் 16 அன்று அனுசரிக்கப்படும் உலக உணவு தினம்!

உலக உணவு தினம்

1945-ல், ஐநா சார்பிலான உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பில், உலகில் உணவின்றி தவிப்பவர்களும் உதவும் நோக்கில், ஆண்டுதோறும் அக்டோபர் 16 அன்று உலக உணவு தினத்தை அனுசரிக்க, 1979-ல் முடிவானது. 150 நாடுகள் உலக உணவு தினத்தின் முக்கியத்துவத்தை ஆண்டுதோறும் பரப்ப முன்வந்தன. பசியாற்றுவதற்கு அப்பால் ருசியின் பெயரால் திணிக்கப்படும் உணவுகள் மீதான கவலையால், இன்னொரு கோணத்தில் 2014 முதல் இந்த தினம் பிரபலமானது.

மிகையான உணவின் காரணமாக வியாதிகளை வரவழைத்து அவதிப்படுவோர் இருக்கும் இதே உலகில்தான், அடுத்த வேளைக்கு உணவின்றி பட்டினியால் சாகும் மக்களும் இருக்கிறார்கள். பட்டினி என்றதும் ஏழ்மையில் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. நமக்கு அருகிலும் போதிய உணவு இன்றியும், அதில் ஊட்டம் இன்றியும் அவதிப்படுவோர் அதிகம் இருக்கிறார்கள்.

உலக உணவு தினம்

கடந்த வாரம் வெளியான, 125 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில், இந்தியா 111வது இடத்தில் சரிந்து வீழ்ந்தது தெரிய வந்திருக்கிறது. சகலத்திலும் நொடித்திருக்கும் பாகிஸ்தான் தேசத்தைவிட இந்தியாவின் இடம் மோசமானது. பாகிஸ்தான் (102), வங்கதேசம் (81), நேபாளம் (69) மற்றும் இலங்கை (60) என அண்டை தேசங்களை ஒப்பிடும்போது, உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் இந்தியா(111) வெகுவாய் பின்தங்கிப் போயிருக்கிறது.

உலக உணவு தினம்

அத்தியாவசியமான மற்றும் சத்தான உணவை உலகில் ஒருவர் பெறுவது, அவருக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்று. அவற்றை முறையாக கிடைக்க உதவுவதற்கான விழிப்புணர்வை பெறுவதும், உலக உணவு தினத்தின் நோக்கங்களில் சேரும். போதிய உணவின்றி அவதிப்படும் மனிதர்களைப் போலவே, அவற்றை சத்தான வகையில் உணவு கிடைக்காத அவலமும் அதிகரித்து வருகிறது. வறட்டு ருசிக்காகவும், நாகரீக கவர்ச்சிக்காகவும் உணவை உண்ணும் போக்கு அதிகரித்ததில், சத்தான உணவுகள் பின்தங்கிப் போகின்றன.

உணவின் பெயரால் குப்பை உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது அதிகரிக்கும்போது, அவை உடலின் நீடித்த பாதிப்புகளுக்கு காரணமாகின்றன. உயிர் வாழ சாப்பிடுவோருக்கு மத்தியில் சாப்பிடுவதற்காகவே வாழத் தலைப்படுவோர், வம்பை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதன் காரணமாக உடல் இளைப்பது, தொப்பையை குறைப்பது, உணவைத் தவிர்ப்பது ஆகியவையும் அதன் பொருட்டு அதிகரிக்கும் வாழ்வியல் நோய்களும் பெரும் சவாலாகி வருகின்றன. உலக உணவு தினத்தை முன்னிட்டேனும், அன்றாடம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு ரகங்களை பரிசீலித்து ஒரு முடிவுக்கு முன்வரலாம்.

உலக உணவு தினம் 2023

இந்த நாளினை முன்னிட்டேனும், அருகில் இருப்பவர்களுக்கு ஒரு வேளை உணவோ அல்லது அன்றாட உணவுக்கான வேலைவாய்ப்பையோ... நம்மால் முடிந்ததை செய்ய முன்வரலாம். அதற்கெல்லாம் நேரமில்லை; ஆனால் உதவும் மனமிருக்கிறது என்பவர்கள், அவ்வாறு உதவும் அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யலாம். குறைந்தபட்சம் உண்ணும் உணவை வீணாக்காது பசியாறிப் பழகத் தொடங்கலாம்.

உலக உணவு தினத்தின் 2023ம் ஆண்டுக்கான கருப்பொருள், நாம் அருந்தும் நீரையும் உணவு என்பதற்குள் கொண்டுவந்து, அதன் முக்கியத்துவத்தை முரசறைந்து இருக்கிறது. அந்த வகையில் ‘நீரே உயிர், நீரே உணவு; எவரையும் தவிக்க விடாதீர்!’ என்கிறது இந்த வருடத்தின் கருப்பொருள். உலகம் உணவுக்கு இணையாக குடிநீருக்கும் தடுமாறி வரும் காலத்தில், அவை தொடர்பான விவாதங்களை இந்த கருப்பொருள் தொடங்கி வைக்கக்கூடும்.

SCROLL FOR NEXT