உழவு

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம்#TNBudget2022

காமதேனு

இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் இயற்கை வேளாண்மைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு தமிழக அரசின் சார்பில் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு ₹ 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல் ஜெயராமன் மரபு சார்ந்த நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக 200 ஏக்கரில் அரசு விதைப் பண்ணைகளில் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் வேளாண் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு அரசு விதைப் பண்ணைகளில் மூலமாக 6 மெட்ரிக் டன் அளவிற்கு பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக இந்த ஆண்டு நஞ்சற்ற உணவு வகைகள் பழங்கள் காய்கறிகள் உற்பத்தி செய்வதற்காக 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயிகள் கொண்ட 150 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் மூலமாக பசுந்தாள் உரம், அமிர்த கரைசல், மண்புழு உரம் ஆகியவை தயாரித்து விற்பனை செய்வதற்கு திட்டம் கொடங்கப்படும். அதற்கு ஒவ்வொரு குழுவுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 180 தொகுப்புக்கள் 7500 ஏக்கரில் உருவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மண்புழு உரம், மாட்டுக் கொட்டகை உள்ளிட்டவை அமைப்பதற்கு ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நிதிநிலை அறிக்கையில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதால் இயற்கை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT