பொருளாதாரம்

உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர்: கிடுகிடுவென உயர்ந்த கௌதம் அதானி!

காமதேனு

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பில்லியனர் பட்டியலின்படி, உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உயர்ந்துள்ளார்.

ஃபோர்ப்ஸின் உலகப் பணக்காரர்கள் பட்டியலின்படி, முதல் இடத்தில் உள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 273.5 பில்லியன் டாலராக உள்ளது. அதற்கு அடுத்ததாக இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 155.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, அதைத் தொடர்ந்து லூயிஸ் வுயூட்டனின் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் 155.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 149.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் நான்காவது இடத்தில் உள்ளார்.

தொழிலதிபர் கெளதம் அதானி, போர்ப்ஸ் பட்டியலில் ஒரு சிறிய முன்னேற்றத்தின் மூலம் பெர்னார்ட் அர்னால்ட்க்கு பதிலாக இப்போது உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆகியுள்ளார். ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலின்படி, அதானியின் நிகர மதிப்பு 5.2 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது, இது 3.49 சதவீதம் ஆகும். இந்த டாப் 10 பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளார். ஆகஸ்ட் 30 அன்று, அதானி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆனார். முதல் மூன்று பில்லியனர்களில் ஒரு ஆசியர் இடம்பிடித்த முதல் நிகழ்வு இதுவாகும்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 72 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. மார்ச் 2022 பங்குச் சந்தைத் தாக்கல்களின்படி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன்ஸ் ஆகியவற்றில் 75% பங்குகளை கௌதம் அதானி வைத்திருக்கிறார். அதானி டோட்டல் எரிவாயுவில் சுமார் 37%, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 65% மற்றும் அதானி கிரீன் எனர்ஜியில் 61% பங்குகளையும் இவர் வைத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT