மே மாதத்தில் திறக்கப்பட்டாலும் மேலான பயனைத் தருமா?

அணையைத் திறந்தால் மட்டும் போதாது... ஆயத்த பணிகளையும் முடுக்கிவிட வேண்டும்!
மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது...
மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது...

1947-க்குப் பிறகு முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஜூன் 12-ம் தேதிதான் அணை திறக்கப்படும். அதற்கே கோரிக்கை மேல் கோரிக்கை வைக்க வேண்டி இருக்கும். ஆனால், அதற்கெல்லாம் வேலையே வைக்காமல் இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது, இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுதான் என்றாலும் இது தமிழக விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு பயனைத்தரும் என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது,

அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதற்கு அரசோ, ஆட்சியாளர்களோ யாரும் காரணமில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆண்டு ஜனவரியில் அணை மூடப்பட்டபோதே அணையில் 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. அதற்குப் பிறகு அணையிலிருந்து குடிநீருக்காக மட்டுமே சிலநூறு கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த அளவுக்கு அணைக்கு தண்ணீர் வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் குறையவேயில்லை.

அதோடு தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிவிட்டது. அது முறைப்படி அறிவிக்கப்படவில்லை என்றாலும் அந்தமழையால் பயன்பெறும் இடங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவே மழைப்பொழிவு இருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு மே மாதமே ஐம்பதாயிரம் கன அடி அளவுக்கு நீர்வரத்து இருந்தது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதத்தில் தான் இந்த அளவுக்கு வரத்து இருக்கும். அதுவும் கர்நாடகத்திலுள்ள அணைகள் அணைத்தும் நிரம்பியபின் உபரிநீரைத்தான் கர்நாடகம் காவிரியில் நமக்கு அனுப்பும்.

மேட்டூரில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்திருப்பது குறுவை சாகுபடிக்காக என்று சொல்லப்பட்டாலும் அதன் பின்னனியில் அணை மேலாண்மை இருக்கிறது. அணை நிரம்பும் கட்டத்தில் இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீரை வெளியேற்றியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்போதுதான் மேற்கொண்டு வரும் தண்ணீரை அணையில் சேமிக்க முடியும். மற்றபடி குறுவை சாகுபடி என்பது தற்போதைய காலகட்டத்தில் மேட்டூர் தண்ணீரை நம்பியில்லை. கடந்த பல ஆண்டுகளாக யாரும் ஆற்று நீரை நம்பி குறுவை செய்வதில்லை. மாறாக, ஆழ்துளைக் கிணறுகளை வைத்திருப்பவர்களே குறுவை சாகுபடி செய்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு இந்த தண்ணீர் என்பது கட்டாயத் தேவையில்லை.

சம்பா சாகுபடிக்கும் இப்போது தண்ணீர் தேவையில்லை. கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணை தண்ணீரை விவசாயிகள் எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு காலத்துக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் போதுமான அளவுக்கும் கிடைப்பதில்லை. முறைப்பாசனம் அமுல்படுத்தப்படுவதால் பல நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் வாய்க்காலில் வருகிறது. அதனால் சம்பா சாகுபடி என்பது வடகிழக்கு பருவமழையை சார்ந்ததாகவே மாறிப்போய் விட்டது.

ஹேமச்சந்தர்
ஹேமச்சந்தர்

முன்புபோல் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சம்பா விதைப்பு தற்போது நடைபெறுவதேயில்லை. செப்டம்பர் மாதத்தில்தான் பணிகள் தொடங்கப்படுகின்றன. அதுவும் நாற்றங்கால் விட்டு, சேறு ஓட்டி, அதில் நடவு செய்வதும் குறைந்துபோய்விட்டது. அதற்கு தண்ணீர் அதிகம் தேவை என்பது ஒருபக்கம் என்றால், தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதும் முக்கிய காரணம். செப்டம்பர் மாதத்தில் நேரடி நெல் விதைப்பு முறையில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு காவிரி நீர் தேவையில்லை. இயற்கையின் கருணைதான் தேவை. நேரடி விதைப்பு செய்யப்பட்ட நெல் மழை பெய்தவுடன் முளைத்து விடுகிறது. அதற்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தோதாக பெய்கிறது. அது காலதாமதம் ஆகும் பட்சத்தில்தான் காவிரிநீரின் பக்கம் கவனத்தைச் செலுத்துகிறார்கள் விவசாயிகள்.

ஆனாலும் இப்போது திறக்கப்பட்டிருக்கும் தண்ணீரைக் கொண்டு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முயற்சிக்கலாம் என்கிறார்கள். ”இந்த ஆண்டு முன்கூட்டியே அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிக ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய முடியும். பொதுவாக குறுவை சாகுபடி 4 லட்சம் ஏக்கரில் நடைபெறுவது வழக்கம். அது இந்தாண்டில் மேலும் 3 லட்சம் ஏக்கர் அதிகரித்து 7 லட்சமாக உயரலாம். என்னைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சம்பா பருவத்தைவிட குறுவைப் பருவம் சிறப்பாக இருக்கும், விவசாயிகளுக்கு பலனைத்தரும்” என்கிறார் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்.

’’காலநிலை, பருவநிலை இரண்டும் குறுவைக்கே உகந்ததாக இருக்கிறது. அதனால் விவசாயிகள் சம்பாவைவிட குறுவை சாகுபடி செய்ய இந்த ஆண்டு முன்வர வேண்டும். உரிய காலத்தில் விதைத்தால் மழைக்காலத்துக்கு முன்பே அறுவடை செய்துவிடலாம், நோய், பூச்சி தாக்குதலும் குறைவாக இருக்கும்” என்கிறார் அவர்.

அவர் கூறுவது உண்மைதான். சம்பா சாகுபடி என்பது வரவர சூதாட்டம் போல் ஆகிவிட்டது. அக்டோபர், நவம்பரில் பெய்யவேண்டிய வடகிழக்கு பருவமழை தள்ளிபோய் டிசம்பர், ஜனவரியில் கொட்டித் தீர்க்கிறது. இதனால், அறுவடை செய்யும் பருவத்தில் இருக்கும் பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி, முளைத்து வீணாகிவிடுகின்றன. அது பெரும்பாலும் கைக்கு வருவதேயில்லை. அப்படியே வந்தாலும், செய்த செலவில் பாதி அளவுக்குக்கூட தேறுவதில்லை. அதனால் சம்பா சாகுபடி செய்து தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துவரும் விவசாயிகள் முன்புபோல இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்துபார்க்கலாம்.

’’அப்படி குறுவை சாகுபடி பரப்பு அதிகமாகும்போது அதற்கேற்ப அரசாங்கமும் தனது தரப்பில் தயாராக இருக்க வேண்டும். முதலில் விதை போதுமான அளவு கையிருப்பு உள்ளதா எனத் தெரியவில்லை. கடந்த ஆண்டு செய்யப்பட்ட அதே அளவிலான பரப்புக்குத்தான் தற்போது விதைகள் இருப்பு வைக்கப் பட்டிருக்கும். இந்தநிலையில் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டால் அதற்குரிய விதைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

கே.வீ.இளங்கீரன்
கே.வீ.இளங்கீரன்

அடுத்ததாக உரங்கள் கையிருப்பு இருக்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு யூரியா கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடிப் போனார்கள். அப்படியே யூரியா கிடைத்தாலும் அதோடு சேர்த்து தேவையில்லாத உரங்களையும் வாங்கினால்தான் ஆயிற்று என்று கட்டாயம் செய்தார்கள். அப்படி இந்த ஆண்டு ஆகாமல் போதுமான உரம் கையிருப்பில் உள்ளதை அரசாங்கம் முதலில் உறுதிசெய்ய வேண்டும்” என்கிறார் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன்.

இன்னும் பல விஷயங்களை அரசாங்கம் முன்னேற்பாடுகளுடன் செய்துவைத்தால் தான் விவசாயிகள் குறுவை சாகுபடியை செம்மையாக செய்ய முடியும் என்கிறார் தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞரும் விவசாயியுமான ஜீவக்குமார். ‘’கடந்த ஆண்டு குறுவைக்கு பயிர்க்காப்பீடு செய்ய முடியவில்லை. அதுகுறித்து உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னாரே தவிர காப்பீடு செய்வதற்கான முயற்சிகளை கடைசிவரை மேற்கொள்ளவேயில்லை. இந்த ஆண்டு குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான முயற்சிகளை அரசாங்கம் இப்போதே தொடங்கி விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான உத்தரவாதத்தினை வழங்கவேண்டும்.

அதேபோல கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் வழங்கப்படுவது செப்டம்பர் மாதத்திலோ அல்லது அதற்குப் பிறகோதான் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அது சம்பாவுக்குத்தான் சரியாக இருக்கும். இந்த ஆண்டு குறுவைக்கு கடன் வழங்க வேண்டும். அதுவும் ஜூன் மாதத்திற்குள்ளாகவே வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டாவது அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்” என்கிறார் ஜீவக்குமார்.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

மேட்டூர் அணையில் திறக்கப்பட்டாலும் அதற்குப்பிறகுள்ள கல்லணை, அணைக்கரை உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் திறப்பது எப்போது என்பதை இதுவரை அரசு அறிவிக்கவில்லை. அதற்கு காரணம், ஆறுகள், வாய்க்கால்களில் பக்கச்சுவர்கள், தடுப்பணைகள், சாலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டால் அந்த பணிகள் பாதிப்புக்குள்ளாகி விடும். அதனால் அந்த பணிகள் ஓரளவுக்கு முழுமைபெற்ற பின்னரே அனைத்து ஆறுகள், வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம்தான் அரசு, 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, குளங்கள், கால்வாய்கள், வாய்க்கால்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டது. இந்தப் பணிகள் எல்லாம் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக அரசுதரப்பில் சொல்லப்பட்டாலும் தற்போதுதான் பெரும்பான்மையான இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முழுமையடைவதற்குள் தண்ணீர் வந்துவிட்டால் அந்த பணிகளை முடித்துவிட்டதாகவே கணக்கு காட்டுவார்கள். அதனால் முழுமையான தூர்வாருதல் என்பது இந்த ஆண்டு இருக்காது என்கிறார்கள் விவசாயிகள்.

இப்படிப்பட்ட சிக்கல்கள் இருப்பதால் தண்ணீர் வந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் குறுவை சாகுபடியைத் தொடங்க முடியுமா என்பதும் கேள்விக்குறி தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in