ஓடி வந்த காவிரி நீருக்கு திருமுறை பாடி வரவேற்பு!

காவிரி நீரை வரவேற்கும் திருவடிக்குடில் சுவாமிகள்
காவிரி நீரை வரவேற்கும் திருவடிக்குடில் சுவாமிகள்

மேட்டூர் மற்றும் கல்லணை திறக்கப்பட்டு அதன்மூலம் கும்பகோணம் வந்தடைந்த காவிரி நீருக்கு திருமுறை பாடி வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்கு மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு அதிகம் இருந்ததாலும் பருவ காலத்திற்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாலும் மேட்டூருக்கு அதிக அளவில் நீர்வரத்து இருந்தது. சுமார் 118 அடியை எட்டிய நிலையில் கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்லணையை வந்தடைந்த காவிரி நீரை கடந்த 27-ம் தேதி அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் திறந்து வைத்தார்கள். கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு கும்பகோணத்திற்கு வந்து சேர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடவே காவிரியில் தண்ணீரை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதக் கடைசியிலேயே காவிரியில் புது வெள்ளமாக வந்த நீரைக்கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கும்பகோணத்திற்கு வந்த அன்னை காவிரியை, வரவேற்கும் முகமாக ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் சிவனடியார்கள் கும்பகோணம், செட்டிமண்டபம், உள்ளூர் பகுதி காவிரி படித்துறையில் இன்று காவிரி அன்னைக்கு மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களுடன், மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.

"கங்கையாய்க் காவிரியாய்க் கன்னியாகிக், கடலாகி மலையாகிக் கழியுமாகி, எங்குமாய் ஏறூர்ந்த செல்வனாகி, எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே" என்னும் திருமுறைகளை பாடி வாழ்த்தி வணங்கினர்.

"தாய்ப்பாலுக்கு கணக்குப் பார்த்தால் தாலி மிஞ்சுமா என்பது போல, நம் வாழ்வாதாரமாக விளங்கும் நீருக்கு வேறு எந்த கைமாறு நம்மால் செய்ய முடியாது. புனித தீர்த்தமான காவிரித் தண்ணீரை முறையாக பயன்படுத்தி, தண்ணீரையும் படித்துறைகளையும் தூய்மையாக பராமரிக்க வேண்டியது பொதுமக்களாகிய நம் அனைவரின் கடமை" என்று திருவடிக்குடில் சாமிகள் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in