`சுதந்திரத்திற்கு பிறகு மே மாதத்தில் இப்போதுதான் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது'

பிஆர் பாண்டியன் பாராட்டு
செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன்
செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன்

சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன், இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``காலநிலை மாற்றம் வேளாண்மையில் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பருவம் மாறி மழை பெய்வதால் முதலில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே பருவ நிலைக்கு ஏற்ப சாகுபடி பருவங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே வெள்ளப்பெருக்கு ஏற்படும் வகையில் கோடை மழை பெய்தது ஒருபக்கம் மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், மறுபுறம் அச்சத்தோடு அணுக வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் மைசூர், மாண்டியா போன்ற காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெரும் மழை பெய்வதால் மேட்டூர் அணை நிரம்பி இருக்கிறது.

இதனைக்கொண்டு உடனடியாக குறுவை சாகுபடி தொடங்கிட வேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பழமொழியை முன்னுதாரணமாக கொண்டு தமிழக அரசு மே 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் செயல். இதனை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.

5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது. உடனடியாக வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் விவசாயிகள், கொண்ட முத்தரப்பு கூட்டம் நடத்தி சாகுபடி பணியை துரிதப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அறுவடை காலத்தில் தடையின்றி நிபந்தனையின்றி கொள்முதல் செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வாழைத்தண்டு வாழை இலை, பட்டைகளையும் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் யூரியாவுக்கு மாற்றான பயிர் ஊக்கிகளையும் ஆய்வுசெய்து கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தமிழக அரசு கொடுக்க முன்வரவேண்டும்.

தொலைநோக்குப் பார்வையோடு ரசாயன உரங்கள் குறைக்கப்பட்டு இயற்கை உரங்கள் பயன்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பை அடிப்படையாக மேம்படுத்த ஊக்கப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in