`6 மாதத்தில் முடித்துள்ளோம்; இதுதான் மகத்தான சாதனை'

ஒரு லட்சமாவது மின் இணைப்பை வழங்கிய முதல்வர் பெருமிதம்
`6 மாதத்தில் முடித்துள்ளோம்; இதுதான் மகத்தான சாதனை'

"6 மாத காலத்தில் இலவச மின்இணைப்பு திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. இதுதான் மகத்தான சாதனை" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் பேசுகையில், "நான் அறிவித்து இருக்கக்கூடிய திட்டத்தின் பயன் உண்மையாக எல்லோருக்கும் கிடைத்திருக்கிறதா? என்பதை கண்ணும் கருத்துமாக கண்காணிப்பதில் நான் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பேன். அதைப்போல்தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். புதிய மின்இணைப்பை பெற்றிருக்கக்கூடிய வேளாண் பெருமக்களாக இருக்கக்கூடிய நீங்கள், இந்த திட்டத்தினால் எந்த வகையில், எந்த அடிப்படையில் பயனடைந்தீர்கள் என்பதுதான் இந்த அரசுக்கு கிடைத்திருக்கிற பாராட்டு பத்திரம்.

ஒரு லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு கொடுக்கலாம், இதனை சில மாதங்களிலேயே கொடுத்து இலக்கை அடைந்துவிட முடியும் என்று மின்துறை அமைச்சர் என்னிடம் சொன்னார். இந்த ஓராண்டு காலத்துக்குள் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு கொடுத்துவிட முடியுமா? என்கிற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஏன், எனக்கும் இருந்தது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி எதிலும் டார்கெட் வைத்து பணியாற்றக் கூடியவர். அந்த டார்கெட்டை எப்படியும் முடித்துவிடுவார் என்பதே இந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது. ஓராண்டு காலம் முடியும் முன்னே ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. இந்த வேகத்துக்கு, இந்த சாதனைக்கு காரணமாக அமைந்திருக்கக் கூடிய அமைச்சர், மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு வேளாண் பெருமக்கள் சார்பில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு லட்சம் மின் இணைப்பால் பயனடையப் போவது அந்த குடும்பம் மட்டுமல்ல, அவர்களுடைய வேளாண் உற்பத்தியால் இந்த மாநிலம் அடையக்கூடிய வளர்ச்சி என்ன? என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே இந்த சாதனையும் நாம் அளவிட முடியாத சாதனை என்றான் சொல்ல வேண்டும்.

1990 வரை உழவர்கள் வேளாண்மைக்காக பயன்படுத்திய மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்திக் கொண்டுதான் வந்தார்கள். இப்போது உள்ள இளைஞர்களுக்கு இது தெரியாமல் கூட இருக்கலாம். அப்போது, 12 லட்சத்து 9 ஆயிரத்து 543 வேளாண் மின் இணைப்புகள் இருந்தது. ஒவ்வொரு உழவர்களிடம் இருந்து 10 குதிரைத்திறன் இருக்கக்கூடிய மின் மோட்டார்களுக்கு தலா 50 ரூபாய் வீதமும், 10 குதிரைத்திறனுக்கு மேலே உள்ள மின் மோட்டார்களுக்கு ஒரு குதிரைத்திறன் மோட்டார்களுக்கு 75 ரூபாயும் ஆண்டு தோறும் கணக்கிட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள வேளாண் உற்பத்தியை பெருக்கி, உழவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த திமுக அரசு 19-11-1990 அன்று கலைஞர், அனைத்து உழவர்களுக்கும் இலவச மின்சாரம் என்ற உன்னதமாக அறிவிப்பை அறிவித்தார்.

இலவச மின்சாரம் என்று சொன்னால்போதுமா? இதற்குரிய இணைப்பை கொடுக்க வேண்டாமா? என்ற கேள்வி எழும்பியது. அதிக அளவில் இணைப்புகளை கலைஞர்தான் கொடுக்க சொன்னார். 2001 முதல் 2006 வரைக்கும் நடந்த ஆட்சிலேயே ஒரு லட்சத்துக்கு 62 ஆயிரத்து 479 வேளாண் மின்இணைப்புகளும், 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில், 2 லட்சத்துக்கு 9 ஆயிரத்து 910 வேளாண் மின்இணைப்புகளும் வழங்கப்பட்டன. அதிலும் குறிப்பாக, 2010-2011 கால கட்டத்தில் திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 77 ஆயிரத்து 158 வேளாண் மின் இணைப்புகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பின் நடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், அதாவது, 2011-2021 முதல் உழவர்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு 2 லட்சத்து 21 ஆயிரத்து 579 மட்டுமே. அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 22,100 மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் மின் இணைப்பு வழங்கவில்லை.

இன்று ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் மகத்தான சாதனை. ஒரு திட்டத்தை தொடங்குவது சாதனை அல்ல, அந்த திட்டத்தின் முழுப் பயனை பயனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதுதான் உண்மையான சாதனையாக அமைந்திட முடியும். 6 மாத காலத்தில் இந்த மின்இணைப்பு திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு லட்சமாவது இலவச மின்இணைப்புக்கான உத்தரவை நான் வழங்குகிறேன்" என்று பெருமிதம் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in