புவிசார் குறியீடு கிடைத்தும் தழைக்காத ‘கன்னியாகுமரி கிராம்பு’!

உற்பத்தி பரப்பளவை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை
உலரவைக்கப்பட்டிருக்கும் கிராம்பு மொட்டுகள்...
உலரவைக்கப்பட்டிருக்கும் கிராம்பு மொட்டுகள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம்பு விவசாயத்தை அதிகரிக்க, அதன் உற்பத்தி பரப்பளவை கூடுதலாக ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்று கிராம்பு விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 760 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படும் கிராம்பு, உலகத் தரம் வாய்ந்தது. இந்தியாவிலேயே கிராம்பு பயிரிடுவதற்கு ஏற்ற மிதமான தட்பவெப்பம், தண்ணீர் தேங்காத மண்போக்கு இங்கு நிலவுவதால், கன்னியாகுமரி கிராம்பில் எண்ணெய் பிழிதிறன் அதிகம். இதன் அடிப்படையில் இந்தக் கிராம்புக்கு, `கன்னியாகுமரி கிராம்பு’ என்ற புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.

கிராம்பு
கிராம்பு

இந்த அறிவிப்பு, மலைத்தோட்ட கிராம்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், கிராம்பு விவசாயம் குறுகிய வட்டத்தில் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து, கன்னியாகுமரியின் முன்னோடி கிராம்பு விவசாயியான கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் லாலாஜி நம்மிடம் பேசினார்.

கிராம்பு சிறந்த பணப்பயிர். இந்தப் பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு கிராம்பு விவசாயம் வருமானம் கொடுக்கிறது. இந்தோனேஷியா, இலங்கை, தான்சானியாவில் அதிக அளவில் கிராம்பு பயிரிடப்பட்டாலும், கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாறை, மாறாமலை, வேளிமலை பகுதிகளில் விளையும் கிராம்பு உலகத்தரம் வாய்ந்தது. இதை அடையாளம் கண்ட மத்திய நறுமணப் பொருட்கள் வாரியம், கன்னியாகுமரி மலைப்பகுதிகளில் கிராம்பு பயிரை மேம்படுத்த ஊக்குவித்து வருகிறது.

130 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் கிராம்பு பயிரிடப்பட்டாலும், 1938-ல் ஆங்கிலோ இந்தியரான சிம்சன் தான், கரும்பாறை பகுதியில் இப்பயிரை அதிகமாக பயிரிட அடித்தளமிட்டார். கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையில் விளையும் கிராம்பில், உலகின் பிற பகுதியில் உள்ளதை விட யூஜினால் (Eugenol), யூஜினால் அசிடேட் (Eugenol acetate) உள்ளிட்ட வேதிப் பொருட்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதுவே நறுமணத்தையும், சுவையையும் மிகைப்படுத்தி காட்டுகிறது.

லாலாஜி
லாலாஜி

கிராம்பில் உள்ள எண்ணெயை பிரித்தெடுத்த பின்னர், கறுப்பு நிறத்துக்கு மாறிய 3-ம் தர கிராம்புதான், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நமது பயன்பாட்டுக்கு தரப்படுகிறது. கன்னியாகுமரியில் விளையும் முதல்தர கிராம்பு வயலட் நிறத்தில் பளபளப்பாக இருக்கும்.

இந்தியாவின் மொத்த கிராம்பு உற்பத்தி 1,100 டன். அதில் 750 டன் கன்னியாகுமரியில் விளைகிறது. ஆனால், இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான கிராம்பு தேவை 15 ஆயிரம் டன் என்பதால், நாம் பெரும்பகுதி இறக்குமதியையே நம்பி இருக்க வேண்டி உள்ளது.

குமரியில் விளையும் தரமிக்க கிராம்பை மும்பை, ஹைதராபாத், அகமதாபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் இருக்கும் வியாபாரிகள் முன்கூட்டியே போட்டிபோட்டு வாங்குகின்றனர். ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் நமது கிராம்புக்கு நல்ல கிராக்கி இருந்தாலும் நம்மால் உற்பத்தி செய்து கொடுக்கமுடியவில்லை. அதேசமயம், ஒரு கிலோ கிராம்பு 1,000 ரூபாய்க்கு குறையாமல் விற்றால்தான் கிராம்பு விவசாயிக்கு போதிய வருமானம் கிடைக்கிறது. அதற்குக் குறைவாக விற்றால் சிரமம்தான்.

செடிகளில் இருந்து ஒரு கிலோ கிராம்பு மொட்டுகளை அறுவடை செய்ய, மலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.75 கூலியாக கொடுக்கிறோம். அறுவடை உச்சத்தில் இருக்கும் நாட்களில் ஒரு தொழிலாளி தினமும் 50 கிலோ கிராம்பு வரை அறுவடை செய்துவிடுவார்.

கிராம்பைத் தரம்பிரிக்கும் தொழிலாளர்கள்...
கிராம்பைத் தரம்பிரிக்கும் தொழிலாளர்கள்...

குமரி மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கிராம்பு விவசாயிகள் உள்ளனர். கிராம்பு விவசாயம் மூலமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைத்தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். இதைக் கருத்தில்கொண்டே 8 ஆண்டுகளுக்கு முன்பு அருமநல்லூர் அருகே, ஊரக்கோணத்தில் அரசின் நறுமணப் பொருட்கள் வணிக வளாகத்தை ஏற்படுத்தினார் அப்போதைய ஆட்சியர் நாகராஜன்.

இந்த வளாகத்தில் கிராம்பு, நல்ல மிளகு, ஜாதிக்காய், ஏலக்காய் போன்ற மலைத்தோட்ட நறுமணப் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கிராம்பு மற்றும் அதன் இலை, பட்டைகள், காய்ந்த கிராம்பு இலைகளில் இருந்து, உடல்வலி, மூட்டுவலிக்கான வலி நிவாரண தைலமும் பிரித்தெடுக்கப்படுகிறது.

தற்போது, மலைத்தோட்ட பயிர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் வழங்கும் மானியத்தை இருமடங்கு அதிகரித்தால் சிறு விவசாயிகளும் பயனடைவர். அத்துடன் மலையடிவாரத்தில் இருந்து மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திரகிரி உட்பட மேற்கு தொடர்ச்சிமலைக்கு உரிய சாலை வசதி அமைத்து கொடுப்பதுடன், வனவிலங்குகளிடம் இருந்து கிராம்பு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நமது நாட்டின் தேவைக்காக பிற நாடுகளை எதிர்பார்க்காமல், நாமே உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு முதல்கட்டமாக கன்னியாகுமரி மலைத்தோட்ட பகுதிகளில் கிராம்பு உற்பத்திக்கான பரப்பளவை கூடுதலாக ஆயிரம் ஹெக்டேராவது அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in